இதுவரை குறள்களில் இருக்கும் சிரிப்பு பற்றிய குறிப்புகளை ஒருவாறு பார்த்துவிட்டோம்.
தூது என்கிற 69வது அதிகாரத்திலிருந்தும் ஒரு குறளைப் பார்த்தோம்.
“தொகச் சொல்லி தூவாத நீக்கி நகச் சொல்லி
நன்றி பயப்பதாம் தூது.” --- குறள் 685; அதிகாரம் – தூது
கூறியவற்றைத் தொகுத்துச் சொல்வதும், வேண்டாதவற்றை நீக்கியும், மனம் மலர்ந்து சிரிக்கும் படியும், (சென்ற தூதினால்) நன்மை விளைவதும் தூதுக்கு இலக்கணம்.
தமிழிலே ‘தூது இலக்கியம்’ என்ற ஒரு சிற்றிலக்கிய வகை இருக்கிறது. எதைத்தான் விட்டுவைக்கவில்லை இந்தத் தமிழ். அதை தான் நாம விட்டுட்டோம்!
தமிழில் முதல் முதல் தோன்றிய தூது நூல், சைவ சமய பெருமகனார் உமாபதி சிவாச்சாரியார் அவர்களால் இயற்றப்பட்ட ‘நெஞ்சுவிடு தூது’. இவரின் காலம் பதினான்காம் நூற்றாண்டு. இவர் சந்தான குரவர்களிலே ஒருவர்.
சமயக் குரவர்கள் நால்வர்: அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர். இவர்கள் இயற்றியவை தோத்திரப் பாடல்கள்.
சந்தான குரவர்கள் நால்வர்: மெய்கண்ட தேவர், அருள் நந்தி சிவாச்சாரியார், மறை ஞான சம்பந்தர், உமாபதி சிவாச்சாரியார். இவர்கள் இயற்றியவை சாத்திரப் பாடல்கள்.
இது நிற்க. தூதுவன் எப்படி இருக்கனும்ன்னு முத்தாய்ப்பாக ஒரு குறள்.
ஒரு அரசனுக்கோ இல்லை தலைவனுக்கோ தூதுவனாக இருப்பவன், தனக்கு அழிவு வந்தாலும்கூட, அதற்காக அஞ்சாமல் தன் தலைமைக்கு வரும் நன்மையை உறுதி செய்வானாம். இல்லை, இல்லை ‘செய்வாராம்’. மரியாதை ப்ளீஸ்.
“இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது.” --- குறள் 690; அதிகாரம் – தூது
எஞ்சாது = அஞ்சாது; இறைவற்கு = தலைவனுக்கு
நாம சமகால தூது இலக்கியத்துக்கு வருவோம்.
தூது வருமா தூது வருமா
காற்றில் வருமா கரைந்து விடுமா
கனவில் வருமா கலைந்து விடுமா
நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா? --- கவிஞர் தாமரை
தூது பற்றி தொடர்ந்து பார்ப்போம். சொல்ல வந்ததை சொல்ல விடுமா?
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
02/10/2021 (221)
Comments