05/04/2021 (78)
தினையும் பனையும்
நீரை தேக்கி வைக்கும் அணையில் சிறியதொரு ஒட்டை ஏற்படின், சின்னதா தானே இருக்கு அப்புறம் பார்த்துக்கலாம்னு இருக்க முடியுமா? என்னாகும்? சின்னதா இருந்தது பெரிதாகி அணையை உடைத்துவிடும். அதுபோல, குற்றங்கள் சின்னதாயிருந்தாலும் அப்படியே விட்டா பெரிய அழிவைக் கொண்டு சேர்க்கும். அதற்கு ஒரு குறள்:
“தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.” --- குறள் 433; அதிகாரம் -குற்றங்கடிதல்
தினைத்துணையாம் குற்றம் வரினும் = தினை போல சின்னதா குற்றம் வந்தாலும்; பழிநாணு வார் = தம் குடிக்கு ஒரு பழி வந்துவிடக்கூடாது என அஞ்சுபவர்கள்; பனைத்துணையாக் கொள்வர் = அக்குற்றம் பனை போல பெரிதாகும்என்பதறிந்து காப்பர்.
அது போல, ஒருத்தர் நமக்கு சின்னதா ஒரு உதவி செஞ்சாலும் அதை என்றும் மறக்காமல் பெரிதாக மதித்து போற்றுவார்களாம் அதன் பெருமதி தெரிந்தவர்கள். “என்ன பண்ணிட்டான், தம்மாத்துண்டு பண்ணான் அது ஒரு பெரிய இதுவா?” ன்னு யோசிக்க மாட்டாங்க. இதோ அந்த குறள்:
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார். --- குறள் – 104; அதிகாரம் - செய்ந்நன்றி அறிதல்
துணை = அளவு
மிகவும் மகிழ்ந்திருக்கும் தருணத்தை விரும்பும் இணையர்கள் வேண்டுவது, “சாமி, கொஞ்ச நேரத்துக்கு எந்த சின்ன சண்டையும் வரமா இருக்கனும்டா” அது போதும்னு வேண்டுவதில்லையா! அதுக்கு ஒரு குறள்:
“தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.” – குறள் 1282; அதிகாரம் - புணர்ச்சிவிதும்பல்
தினையையும் பனையையும் நம்ம வள்ளுவப்பெருந்தகை என்ன மாதிரி பயன் படுத்துகிறார்! அருமை, அருமை.
சிரிச்சுக்கிட்டே இருங்க. மகிழ்ச்சியா இருங்க.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments