07/04/2024 (1128)
அன்பிற்கினியவர்களுக்கு:
உள்ளத்துள் வைத்துக் கொண்டு வெளியே தேடுகிறாய் என்றாள் குறள் 1249 இல். இது தத்துவார்த்தமானச் சொல். நாம் அனைவரும் அவ்வாறே!
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே …
உன்னையே நினைத்திருப்பான் உண்மையைத் தான் உரைப்பான்
ஊருக்குப் பகையாவான் ஞானத் தங்கமே
அவன் ஊழ்வினை என்ன சொல்வேன் ஞானத் தங்கமே … கவியரசு கண்ணதாசன், திருவருட்செல்வர், 1967
இது நிற்க.
“துன்” என்ற சொல் குறித்து முன்பு நாம் சிந்தித் துள்ளோம். காண்க 16/11/2023. துன் என்றால் நெருங்கு என்று பொருள். துன்னாதார் என்றால் பகைவர். துன்னா என்றால் நெருங்காமால் என்று பொருள்படும்.
துன்னாத் துறந்தாரை நெஞ்சத் துடையேமா
இன்னும் இழத்தும் கவின். – 1250; - நெஞ்சொடு கிளத்தல்
கவின் = அழகு; துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா = நம்முடன் நெருங்கி இருக்காமல் நம்மைவிட்டுப் பிரிந்து போனவரை உள்ளுக்குள்ளே நினைத்து நினைத்து மருகி; இன்னும் இழத்தும் கவின் = நாம் இதுவரை புற அழகை இழந்தோம். இனி நம் மனமும் நிலை குலையுமோ?
நம்முடன் நெருங்கி இருக்காமல் நம்மைவிட்டுப் பிரிந்து போனவரை உள்ளுக்குள்ளே நினைத்து நினைத்து மருகி, நாம் இதுவரை புற அழகை இழந்தோம். இனி நம் மனமும் நிலை குலையுமோ?
கவின் என்றால் அழகு. அதனால்தான், நம் தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு அழகுப் பொருள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு Cavincare என்று பெயர் சூட்டியுள்ளார்கள்!
நிலை குலைதல் என்பது மனம் கெட்டுப் போவது. அஃதாவது, “மறை கழண்டு போவது” என்பார்களே அதுதான்! இதனை நிறை அழிதல் என்பார்கள். எனவே, அடுத்த அதிகாரமாக நிறை அழிதலை வைத்துள்ளார்.
மனம் கெட்டுப் போனால் சொல்லக் கூடாததைச் சொல்வார்கள்; செய்யக் கூடாதைச் செய்வார்கள்.
“நிறை எனப்படுவது மறைபிறர் அறியாமை” என்கிறது கலித்தொகை பாடல் 133. (எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும் – சாமி. சிதம்பரனார்)
நிறை அழிதலில் முதல் பாடலைப் பார்ப்போம். காமமென்னும் கணிச்சி, அஃதாவது கோடாலி அக ஒழுக்கமாகிய நாணம் என்னும் தாழ்ப்பாளை உடைத்து அனைத்து இரகசியங்களையும் பூட்டி வைத்திருக்கும் மனக் கதவினை உலகிற்குத் திறந்துவிடுகிறதாம்.
காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத் தாழ் வீழ்த்த கதவு. – 1251; - நிறை அழிதல்
காமக் கணிச்சி நாணுத் தாழ் உடைக்கும் = அவர் மேல் கொண்ட அளவிற்கு அதிகமான அன்பு என்னும் கோடாலி அக ஒழுக்கமான நாணம் என்னும் தாழ்ப்பாளைத் தகர்க்கும்; நிறையென்னும் கதவு வீழ்த்த = அதனால், மறை பிறர் அறியாமல் காக்கும் கதவு திறந்து கொள்ள, அது நம்மைக் கேலிக்கு உள்ளாக்கும்.
அவர் மேல் கொண்ட அளவிற்கு அதிகமான அன்பு என்னும் கோடாலி அக ஒழுக்கமான நாணம் என்னும் தாழ்ப்பாளைத் தகர்க்கும். அதனால், மறை பிறர் அறியாமல் காக்கும் கதவு திறந்து கொள்ள, அது நம்மைக் கேலிக்கு உள்ளாக்கும். அஃதாவது, நாம் இதுவரை கட்டிக் காக்கும் இரகசியங்கள், மடை திறந்தாற்போல் வெளியே வரும். அவ்வாறு நிகழ்ந்தால்?
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.
Comments