06/03/2023 (732)
சுக்ராச்சாரியப் பெருமான் மாவலிக்கு நிகழப்போகும் சூழ்ச்சியைச் சொன்னார். அதைக் கேட்ட மாவலி சற்றும் அசரவில்லை. அப்படி வந்திருப்பவர் அவ்வளவு பெரியவர் எனின் அவருக்கு என்னால் உதவமுடியும் என்றால் என்னைவிடப் பேறுபெற்றவர் யார் இருக்க முடியும் என்றார்.
மேலும் தொடர்கிறார் மாவலி. “ஆச்சாரியாரே, நல்ல நெறியில் நாளும் நடக்கும் நுண்ணிய நூல் பல பயின்றோர் “வேண்டியர்; வேண்டாதார்” என்ற மாறுபாடு கருதார். ஒப்பிலா மிக உயர்ந்தவர் தானம் பெறுபவர் என்றால் என்னைவிடப் பெரியவர் யாவர் உயர்ந்தார்?”
"துன்னினர் துன்னலர்" என்பது சொல்லார், முன்னிய நல் நெறி நூலவர்; 'முன்வந்து, உன்னிய தானம் உயர்ந்தவர் கொள்க' என்னின், இவன் துணை யாவர் உயர்ந்தார்?” --- கம்பராமாயணம்; பால காண்டம்; வேள்விப் படலம்; பாடல் 18
ஆச்சாரியாரே, நீவிர் சிறந்த அறிவுடையவர் ஆதலால் வருவது உரைக்கின்றீர். உங்களுக்குத் தெரியாதது அல்ல. ஆனால், உங்களுக்கு ஒன்று தெரிவித்துக் கொள்கிறேன்.
வன்மை கை உற்றவர்கள் தங்கள் இன் உயிரேனும் கொடுப்பர். இதை ‘சிலகூறி’ எள்ளி நகையாடுவரோ மேலோர்?
ஆச்சாரியாரே, நீங்கள் கற்றுத்தந்தது உங்களுக்கே மறந்திருந்தால் ஒன்று உங்களுக்கு கவனமூட்டுகிறேன். பொறுத்தருள்க. “கொள்ளுதல் தீது; கொடுப்பது நன்று” என்றல்லவா கற்றுத்தந்தீர்கள்?
”வெள்ளியை ஆதல் விளம்பினை, மேலோர்
வள்ளியர் ஆகில் வழங்குவது அல்லால்,
எள்ளுவ என் சில? - இன் உயிரேனும்
‘கொள்ளுதல் தீது; கொடுப்பது நன்றால்’.” --- கம்பராமாயணம்; பால காண்டம்; வேள்விப் படலம்; பாடல் 19
மேலும் தொடருவோம். அதுவரை, மடி ஆண்மையை மாற்றுவதை மட்டும் மறந்துடாதீங்க! அதாங்க, சோம்பலைத் தவிர்பது!
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments