06/05/2023 (793)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
கலங்காது கண்ட வினையைத் துளங்காது தூக்கம் கடிந்து செய்வது செயல் என்றார் குறள் 668 இல்.
அடுத்தக் குறிப்பு என்னெவென்றால் ஒரு செயலைச் செய்யும்போது, துன்பம் மிகுதியாக வந்தாலும் கலங்காமல் தொடர்ந்து செய்வது.
அப்படிச் செய்யும்போது, வந்த துன்பங்கள் எல்லாம், அந்தச் செயல் இனிதே நிறைவேறி இன்பத்தைப் பயக்கும்போது ஒன்றுமில்லாமல் போகும்.
“துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.” --- குறள் 669; அதிகாரம் – வினைத்திட்பம்
துணிவு = கலங்காமை; துன்பம் உறவரினும் = செயலைச் செய்யும்போது துன்பம் மிகுதியாக வரினும்; இன்பம் பயக்கும் வினை துணிவாற்றி செய்க = முடிவில் இன்பத்தை நல்கக் கூடியச் செயலைக் கலங்காமல் செய்க.
செயலைச் செய்யும்போது துன்பம் மிகுதியாக வரினும், முடிவில் இன்பத்தை நல்கக் கூடியச் செயலைக் கலங்காமல் செய்க. இதுதான் வினைத்திட்பம் உடையவர்களின் வழி என்ற இரண்டாம் குறிப்பைச் சொல்லுகிறார்.
இது நிற்க.
இவ்வதிகாரத்தின் முதல் குறளில் வினைத்திட்பம் என்பது மனத்திட்பம் என்றுத் தெள்ளத் தெளிவாக கூறி, மற்றத் திட்பங்கள் எல்லாம் அடுத்துதான் என்று கோடிட்டுக் காட்டியிருந்தார்.
இப்போது, இந்த அதிகாரத்தின் முடிவுரையைச் சொல்ல வேண்டும்.
எல்லாத் திட்பங்களும் என்னிடம் இருக்கிறது. அதாவது செல்வம், படை, நட்பு, அரண் முதலியன. ஆனால் என்ன, எனது மனத்தில்தான் தெளிவு இல்லை, உறுதி இல்லை என்று சொல்லி ஒருவர் மக்களிடம், அவர்களின் வாக்கை அவருக்கே அளிக்க வேண்டும் என்று கேட்டால் வாக்களிப்பார்களா? மனத்தில் உறுதி இல்லாத தலைவர்கள் பலர் அரசியல் களங்களில் புறந்தள்ளப்படுவது அன்றாட வழக்காக இருப்பதை நாம் காணுகின்றோம்.
“எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு.” --- குறள் 670; அதிகாரம் – வினைத்திட்பம்
வினைத்திட்பம் வேண்டாரை = வினைத்திட்பம்தான் முக்கியம் என்பதை அறியாத அமைச்சரை; எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் = ஏனையத் திட்பங்களைப் பெற்றிருந்தப் போதும்; உலகு வேண்டாது = இந்த உலகம் ஒரு பொருட்டாக மதிக்காது.
வினைத்திட்பம்தான் முக்கியம் என்பதை அறியாத அமைச்சரை, ஏனையத் திட்பங்களைப் பெற்றிருந்தப் போதும், இந்த உலகம் ஒரு பொருட்டாக மதிக்காது.
உலகம் என்றால் இந்த உலகத்தில் உள்ளச் சான்றோர்கள் என்று பொருள்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comentarios