top of page
Search

துனியும் புலவியும்... 1306, 45, 17/06/2024

17/06/2024 (1199)

அன்பிற்கினியவர்களுக்கு:

நமக்கு நன்கு அறிமுகமான குறள்தான் இந்தக் குறள். காண்க 03/03/2021.

 

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது. – 45; - இல்வாழ்க்கை

 

இந்தக் குறளுக்குப் பொருள் சொல்லும் பொழுது பரிமேலழகப் பெருமான் “நிரல் நிரை அணி” இலக்கணத்தைக் கொண்டு பொருள் எடுக்க வேண்டும் என்றார்.

ஆண்டுகள் சில பறந்துவிட்டதனால் மறந்து போயிருக்க வாய்ப்பு இருக்கிறது. அதனை என்னவென்று மீண்டும் ஒரு முறை பார்த்துவிடுவோம்.

 

பொருள் என்ற ஒன்று இருந்தால் அந்தப் பொருளுக்கு ஒரு தனித்துவமான பண்பும் அந்தப் பொருளினால் விளையும் பயனும் இருக்கும். – இது பொது விதி.

 

பால் என்றால் வெண்மையாகவும், நீர்மையாகவும் இருக்கும். இவை அதன் பண்புகள். பாலின் பயன் என்னவென்றால் உடலுக்கு உறுதி தருவது.

 

அதுபோல, இல்வாழ்க்கைக்கு அன்பு என்பது பண்பு; அறம் என்பது பயன். இதனைத்தான் நம் பேராசான் அந்தக் குறளில் சொல்லியுள்ளார்.

 

முதல் அடியில் உள்ள முதல் சொல்லான அன்பிற்கு இரண்டாம் அடியில் உள்ள முதல் சொல்லான பண்பினை இணைக்க வேண்டும்; முதல் அடியில் உள்ள இரண்டாம் சொல்லான அறனிற்கு இரண்டாம் அடியில் உள்ள பயனை இணைத்துப் பொருள் சொல்ல வேண்டும்.

 

அஃதாவது:

அன்பு உடைத்தாயின் அஃது இல்வாழ்க்கையின் பண்பு;

 

அறம் உடைத்தாயின் அஃது இல்வாழ்க்கையின் பயன்.

 

சரி, இப்பொழுது இந்தக் குறள் எதற்கு என்கிறீர்கள். அது போன்றே ஒரு குறள் நாம் இப்பொழுது பார்த்துக் கொண்டிருக்கும் புலவி அதிகாரத்திலும் வருகின்றது.

 

குறள் 45 இனை மனத்தில் நிறுத்துங்கள். முடியவில்லையா, இதோ அந்தக் குறளையும் அருகருகில் வைத்துக் கொள்வோம். வேலை எளிதாக முடியும்!

 

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைபண்பும் பயனும் அது. – 45; - இல்வாழ்க்கை

 

துனியும் புலவியும் இல்லாயின் காமம்

கனியும் கருக்காயும் அற்று. – 1306; - புலவி

 

இந்தக் குறளிலும் நாம் நிரல் நிரை அணியிலக்கணத்தைப் பயன்படுத்தலாம்.

 

துனிக்கு கனி; புலவிக்கு கருக்காய்!

 

குறள் 45 இல் உடைத்தாயின் என்றவர் இங்கே இல்லாயின் என்கிறார். அவ்வளவே. மாற்றி எழுதிக் கொள்வோம்.

 

துனி இல்லாயின் கனி அற்று;

புலவி இல்லாயின் கருக்காய் அற்று

 

இல்லறவாழ்வில் இருவரிடையே வெறுப்பு இல்லையென்றால் வாழ்க்கை பழம் போல இனிக்குமாம்; அதே சமயம், சிறு சிறு ஊடல் உரசல் இல்லையென்றால் கருக்காய் போல முழுப் பயன் இல்லாமல் போகுமாம்.

 

துனி என்றால் வெறுப்பு, பகை, துன்பம் என்றெல்லாம் பொருள் உண்டென்று பார்த்துள்ளோம்.

 

கருக்காய் என்றால் கனியாத காய்; கருக்காய் அல்லது கருக்கல் நெல் என்றால் அரிசி மணி பிடிக்காத நெல் என்றும் பொருள். அஃதாவது முழுப் பயனும் தர வல்லதன்று.

 

அற்று என்றால் அதனைப் போன்றது என்று பொருள்.

 

துனியும் புலவியும் இல்லாயின் காமம்

கனியும் கருக்காயும் அற்று. – 1306; - புலவி

 

துனி(யும்) இல்லாயின் காமம் கனி(யும்) அற்று = பெரும் பிணக்கு ஏதும் இல்லையென்றால் கூடல் இன்பம் சுவையான பழம் போல; புலவி(யும்) இல்லாயின் காமம் கருக்கா(யும்) அற்று = சிறு ஊடலும் இல்லையென்றால் கூடல் இன்பம் கருக்காய்ப் போல.

 

பெரும் பிணக்கு ஏதும் இல்லையென்றால், கூடல் இன்பம் சுவையான பழம் போல. சிறு ஊடலும் இல்லையென்றால் கூடல் இன்பம் கருக்காயினைப் போல.

 

பெரும் பிணக்கு கூடாது; சிறு ஊடல் வேண்டும் என்கிறார்.

 

அறிஞர் பெருமக்களின் உரைகள் வருமாறு:

 

பேராசிரியர் இரா. சாரங்கபாணி: முதிர்ந்த பூசலாகிய துனியும் அளவாகிய புலவியும் இல்லாவிட்டால் காமமானது முறையே கனியும் இளங்காயும் போன்றிருக்கும். துனி இல்லாதாயின் காமம் கனிபோல இனிக்கும். புலவி இல்லாதாயின் காமம் காய் போலத் துவர்க்கும். ஆகவே துனி கூடாது. புலவி வேண்டும் என்பது கருத்து.

 

பேராசிரியர் சாரங்கபாணி அவர்களின் உரை தொல்லாசிரியர்கள் மணக்குடவர் பெருமான்,  பரிப் பெருமாள் ஆகியோர்களின் உரையைத் தழுவி வருகிறது. அஃது பொறுத்தமானதாகவும் உள்ளது.

ஆனால்,

 

புலவர் புலியூர்க் கேசிகன்: பெரிய பிணக்கமும் சிறிதான பிணக்கமும் இல்லாமற் போனால், காமமானது, மிகக்கனிந்த கனியும், பழுக்காத கருக்காயும் போலப் பயனற்றது ஆகும்.

 

மூதறிஞர் மு. வரதராசனார்: பெரும்பிணக்கும் சிறுபிணக்கும் இல்லாவிட்டால், காமம் மிகப் பழுத்த பழமும் முற்றாத இளங்காயும் போல் பயன்படாததாகும்.

 

பெரும்பாலான அறிஞர் பெருமக்கள் நிரல் நிரை அணியிலக்கணத்தைப் பயன்படுத்தவில்லை. ஏனென்றால் பரிமேலழகப் பெருமான் உரையில் அஃது இல்லை.

 

நிரல் நிரைதான் பொறுத்தமாகப்படுகிறது. இப்படித்தான் பரிமேலழகப் பெருமானும் எழுதியிருக்க வாய்ப்பு உள்ளது.

 

இந்தக் குறளுக்கான உரையை பரிமேலழகப் பெருமான் உரையில் இட்டு நிரப்பிவிட்டார்களா என்பதும் விளங்கவில்லை. அறிஞர் பெருமக்கள் ஆராயத்தக்கது.

 

உப்பைப் போல் இருக்கட்டும் புலவி என்றவர் துனி அளவு அஃதாவது பெரும் பிணக்கு அளவிற்கு எடுத்துச் செல் என்று சொல்வாரா என்ன?

 

அதுவும் பெரும் பிணக்கு இல்லாயின் காமம் முதிர்ந்த பழம் போலப் பயனற்றதாகப் போகும் என்று பொருள் காண்பதும் வித்தியாசமாகத் தெரிகின்றது.

 

உங்கள் கருத்து என்ன?

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.



Comments


Post: Blog2_Post
bottom of page