05/11/2021 (255)
‘கற்றாரைக் கற்றாரே காமுறுவர்’ ன்னு நம்ம ஔவைப் பாட்டி சொன்னதைப் பார்த்தோம்.
நம்ம பேராசான் வள்ளுவப் பெருந்தகை ‘காமுறுவர்’ யார்ன்னு சொல்லியிருக்காரா?
சொல்லியிருக்கார், கற்கும் போது ஒரு இன்பம் இருக்குமாம். அடடா பிரமாதம். என்னமா இருக்கு, இது இதுவரைக்கும் நமக்கு தெரியாம போச்சே, இப்படின்னு நினைப்பாங்களாம்.
அதோட நிற்காம அதை மற்றவர்களுக்கும் சொல்வாங்களாம். அவங்க, ‘அட ஆமாம் பாரேன்’ என்ன ஒரு சிறப்புன்னு அவர்களும் மகிழ்வாங்களாம்.
(‘உவப்பத் தலைகூடி உள்ளப் பிரிதல்’ குறள் 394ஐ கொஞ்சம் கவனம் வைச்சுக்கோங்க.)
நாம கூட புதுசா தெரிந்து கொண்டால் அதை பகிருகிறோம் அல்லவா? அதிலே ஒரு மகிழ்ச்சி இருக்கத் தானே செய்யுது.
இந்த மாதிரி அறிவு பரிமாற்றத்தை கற்றவர்கள் விரும்புவாங்களாம். அதாங்க ‘காமுறுவார்’களாம்.
“தாம் இன்புறுவது உலகு இன்புறக்கண்டு
காமுறுவர் கற்று அறிந்தார்.” --- குறள் 399; அதிகாரம் - கல்வி
தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு = நாம் கற்கும்போது இன்பம் அடையும் அந்த கல்வியினால் உலகமும் இன்புறுவதைக் காணும் போது; காமுறுவர் கற்று அறிந்தார் =அதை மிகவும் விரும்புவார்களாம் கற்று அறிந்தவர்கள்.
எதை மிகவும் விரும்புவார்களாம்?
அந்த பரிமாற்றத்தில் மகிழ்ச்சி. இருந்தாலும், அதற்கு மூலக்காரணமான அந்த ‘கல்வி’ இருக்கு பாருங்க, இது தான் முக்கியம் – அந்த கல்வியை விரும்புவார்களாம்.
நாம என்ன பண்றோம் என்றால் ‘share’ பண்ணிட்டு (பகிர்ந்துட்டு) நாம் அதை மறந்துடறோம்! எவ்வளவு செய்திகளை நாம ‘share’ பண்ணுகிறோம். அதிலே சிறப்பானவைகளை நாம பின்பற்றினால் பெரிய ஆளா ஆயிடமாட்டோம்.
சரி, இந்தச் செய்தி உங்களுக்கு பிடிச்சிருந்தா, நீங்க கொஞ்சம் share பண்ணுங்க.
பண்ணுங்க உலகு இன்புறட்டும்! நன்றி.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments