21/10/2022 (597)
“கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும்.”
“அழுத பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும்.” உமை அன்னையே பொற்கின்னத்தில் பால் தருவதற்கும் வாய்ப்பு உண்டு!
ஏன் என்றால் அழுபவர்களுக்கு கொடுப்பவர்கள் அனைவரும் உமை அன்னையே!
தயைசெய்து கேளுங்கள். தேவையானதைக் கேளுங்கள். இந்தப் பிரபஞ்சம் தருவதற்கு தயாராக இருக்கிறது என்பதை பல குருமார்கள் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள்.
அவள்: இந்த ஊர் இருக்கிறதே அதன் வாய்க்கு அவல் வேண்டும் என்று எங்களின் தொடர்பை எடுத்து மென்று கொண்டுள்ளது. “அவர் போய்விட்டார். இவள் கதி அதோ கதி”, இப்படி, அப்படி என்று கவ்வையை கிளப்பி ஊர் சுற்ற வைத்துக் கொண்டுள்ளது.
தோழி: ம்ம்.. அப்புறம்?
அவள்: இதே ஊர் என் காதலர் வந்து எங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தடைகளை எடுத்துக் கூறினால் அதற்கும் உதவும். இதற்கு பல உதாரணங்கள் இருக்கு. உடன்போக்குக்கும் உதவுவதை நான் பார்த்துள்ளேன்.
அவர் வருவாரா?
“தாம் வேண்டின் நல்குவர் காதலர் யாம் வேண்டின்
கௌவை எடுக்கும் இவ்வூர்.” --- குறள் 1150; அதிகாரம் – அலர் அறிவுறுத்தல்
யாம் வேண்டின் கௌவை எடுக்கும் இவ்வூர் = அவர்களுக்கு (ஊராருக்கு) வேண்டும் என்றால் கவ்வையை (புரளியை, பழிச்சொல்லை) எடுத்துப் பரப்பும் இந்த ஊர்;
காதலர் தாம் வேண்டின் நல்குவர் = என்னருமை காதலர் வந்து, அவரின் உறுதியைக்கூறி, உதவி வேண்டும் என்றால் இதே ஊர் அதனையும் செய்து முடிக்கும்.
ஊராருக்கு வேண்டும் என்றால் புரளியை, பழிச்சொல்லை எடுத்துப் பரப்பும் இந்த ஊர்; என்னருமை காதலர் வந்து, அவரின் உறுதியைக்கூறி, உதவி வேண்டும் என்றால் இதே ஊர் அதனையும் செய்து முடிக்கும்.
களவியலின் கடைசிக் குறள் இது.
அடுத்தக் காட்சி: ஊரார் உதவிவிட்டார்கள். உற்றார் , உறவினர்கள் அவர்களை இணைத்தும் விட்டார்கள்.
அடுத்து என்ன?
அடுத்து அவர்கள் வழி கற்பியல்தான்.
அவர்கள் சற்று களித்திருக்கட்டும்.
நாம் வேற வேலையைப் பார்ப்போம்.
நன்றி. மீண்டும் சந்திப்போம்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments