06/03/2024 (1096)
அன்பிற்கினியவர்களுக்கு:
கண் விதுப்பு அழிதல், பசப்புறு பருவரல் அதிகாரங்களைத் தொடர்ந்து தனிப்படர் மிகுதி.
கண்ணைத் தூற்றினாள், பசலையைப் பழித்தாள். இறுதியில் பசலைதான் இருந்துவிட்டுப் போகட்டுமே என்று முடித்தாள். இருப்பினும், அந்தப் பிரிவு நீடிப்பது அவளுக்கு வேதனையைத் தருகிறது. நினைத்துப் பார்க்கிறாள். நமக்கு மட்டுமா இந்தத் துன்பம். அவருக்கும் இதே நிலைதானே! என்று எண்ணுகிறாள்.
தனிமையிலே இனிமை காண முடியுமா
நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா …
துணை இல்லாத வாழ்வினிலே சுகம் வருமா
அதைச் சொல்லிச் சொல்லித் திரிவதனால் துணை வருமா …
மனமிருந்தால் வழியில்லாமல் போகுமா …
வெறும் மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா
தனிமையிலே இனிமை காண முடியுமா … பன்முக வல்லுநர் K.D.சந்தானம்; ஆடிப்பெருக்கு, 1962
சந்தக் கவி புனைவதில் வல்லவர், சிறந்த நடிகர், எழுத்தாளர். பன்முகத் திறமை கொண்டவர் கே.டி. சந்தானம் அவர்கள். மணமகள் தேவை (1957) என்ற திரைப்படத்தில், சிறந்த நகைச்சுவைக் கலைஞர் சந்திரபாபு அவர்கள் பாடி நடனமாடும் “பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே…” என்ற பாடல் நம் கே.டி. சந்தானம் அவர்களின் கற்பனைதான். அம்பிகாபதியில் அருமையான பாடல்களைத் தந்துள்ளார்.
இது நிற்க.
தனிமையிலே இனிமை காண முடியுமா என்பதுதான் அவளின் கேள்வி. மனமிருந்தால் வழியில்லாமல் போகுமா என்று பதில் சொன்னாள் அவளின் தோழி.
அதற்கு, அவள், வெறும் மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா என்கிறாள்!
தோழி: மாம்பழத்தில் கொட்டை உண்டு. அதை நீக்கி உண்ண வேண்டும். ஆனால், காழில் கனி என்ற ஒன்று இருக்கிறது, அஃதாவது, கொட்டை என்ற ஒன்றில்லாமல் முழுவதுமே சுவைக்கக் கூடியக் கனி ஒன்று இருப்பது உனக்குத் தெரியுமா?
அவள்: அப்படியா? யாரிடம் இருக்கிறது?
தோழி: உன்னிடம்தான் இருப்பதாகச் சொன்னார் நம் பேராசான்.
அவள்: ம்ம்…
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி. – 1191; - தனிப்படர் மிகுதி
தம் வீழப் பெற்றவர் தாம் வீழ்வார் = தம்மால் காதலிக்கப் பெறுபவர் அதே அன்போடு தம்மைக் காதலித்தால்; காமத்துக் காழில் கனி பெற்றாரே = அதன் பயனாக இன்ப நுகர்ச்சி என்னும் கடினமான கொட்டை ஏதுமில்லாத முழுவதும் சுவைக்கக் கூடிய பழத்தைப் பெற்றவர்களன்றோ?
தம்மால் காதலிக்கப் பெறுபவர் அதே அன்போடு தம்மைக் காதலித்தால், அதன் பயனாக இன்ப நுகர்ச்சி என்னும் முழுவதும் சுவைக்கக் கூடிய கடினமான கொட்டை ஏதுமில்லாத பழத்தைப் பெற்றவர்களன்றோ?
இன்பத்திற்குத் தடை ஏதுமில்லை என்கிறார்.
அப்படி இருக்கும்போது நீ ஏன் துன்பப்பட வேண்டும் என்கிறாள் தோழி.
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.
Kommentare