10/10/2023 (948)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
அடக்கமாக இருக்கணும் என்றார். இருந்தால் அமரருள் வைப்பார்கள் என்றார் குறள் 121 இல்.
இந்த உயிருக்கு அடக்கத்தைத் தவிரப் போற்றி பாதுகாக்கக்கூடிய பொருள் ஏதுமில்லை என்ற குறிப்பைத் தந்தார் குறள் 122 இல்.
குறள் 123 இல் புலன்கள் ஐந்தினை அடக்கும் அறிவைப் பெற்றால் அதன் செறிவறிந்து சீர்மை பயக்கும் என்றார்.
எந்த நிலையிலும் மாறாமல் அடக்கத்தோடு இருப்பது மலையினும் மாணப் பெரிது என்று உயர்த்திச் சொனார் குறள் 124 இல்.
குறள் 125 இல், “எந்த நிலையிலும்” என்பதில் உள்ள குறிப்பினை விரித்து, உயர்ந்த நிலையிலும் அடக்கமாக இருப்பது சிறப்பிற்கு சிறப்பு என்பதை எடுத்துக் காட்டினார்.
சரி, அடக்கம், அடக்கம் என்று சொன்னேன் அல்லவா? அதை எப்படி அடக்குவது அல்லது அடங்குவது என்பதைச் சொல்கிறேன் கேட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்லி ஆமையாரைப் போல் ஐந்து அடக்கல் வேண்டும் என்றார். இப்படிச் செய்தால் “எழுமையும் ஏமாப்புடைத்து” என்று இதன் பயனையும் தெரிவித்தார் குறள் 126 இல்.
இப்போது முக்கியமான ஒன்றைச் சொல்லப் போகிறேன். எந்தப் புலன்களை அடக்க முடியாவிட்டாலும் இந்த நா இருக்கிறதே அதை மட்டுமாவது காத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் துன்பம்தான் என்ற விளைவினைச் சொல்லி எச்சரித்தார் குறள் 127 இல்.
நாகாப்பது என்பது வேறு ஒன்றுமல்ல! தீச்சொல்களைப் பேசாமல் இருப்பது என்று சொல்லித் தெளிவுபடுத்தினார் குறள் 128 இல்.
தீச் சொல் பேசாதீங்க என்றால் நம்மாளு விடுவாரா?
நம்மாளு: ஐயா, அப்படிப் பேசினால் என்ன ஆகும்?
வள்ளுவப் பெருந்தகை: ரொம்ப நல்ல கேள்வி தம்பி. ஒருத்தருக்கு ஏதோ ஒரு காரணத்தாலே தீக் காயம் ஏற்பட்டுவிட்டதுன்னு (ஏற்பட வேண்டாம் – ஒரு கற்பனைக்காக) வைத்துக் கொள்ளுங்கள். அப்புறம் என்ன ஆகும்?
நம்: ஐயா, அந்தப் புண்ணை நல்ல மருத்துவரை நாடி ஆற்றிக் கொள்ள வேண்டியதுதான்.
வ.பெ: மிக்கச் சரி. காலப்போக்கில் அந்தப் புன்ணும் கூட மறைந்துவிடும். ஆனால், ஒருவர் இன்னொருவரை நாவினால் தீயச் சொல்களைப் பேசிக் கடிந்து கொண்டால்?
நம்: அதை அவர்கள் வாழ்நாளைக்கும் மறக்கமாட்டார்கள்.
வ.பெ:
“தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.” --- குறள் 129; அதிகாரம் – அடக்கமுடைமை
தீயினால் சுட்ட புண் உள் ஆறும் = தீயால் ஏற்பட்ட புன்ணும் கூட மறைந்துவிடலாம். அவரும் அதனை மறந்தும் விடலாம், (ஆனால்); நாவினால் சுட்ட வடு ஆறாது = சொல்களால் ஏற்படும் வடு ஆறாது.
சொல்லாட்ச்சியைக் கவனிக்கவும். தீயினால் ஏற்படுவது புண் என்றும் சொல்லினால் ஏற்படுவது வடு என்றும் கூறியுள்ளார். புண்ணிற்கு மருந்திடலாம். வடுவிற்கு மருந்தில்லை!
தீப்புண் உள்ளே இருந்து ஆறி மேலே வடுவாகி, பின் அதுவும் மறைந்துபோகும். ஆனால், தீச் சொல்களால் ஏற்படும் புண்களோ கண்ணிற்குத் தெரியாது. ஆனால், மனத்தில் வடுவாகத் தங்கிவிடும். அந்த வடு காலத்திற்கும் அழியாது.
எனவே, தீயினும் கொடிது தீச்சொல் என்றார். தீச்சொல் நேரடியாக கடுஞ்சொல்களாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. பொய், குறளை முதலியனவும் தீச் சொல்களே. தவிர்ப்போம்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
நாவினால் yes. very important it does two actions.. 1.taste 2.speech. both are to be controlled அடக்கம்