top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

தார்தாங்கிச் செல்வது ... 767

17/07/2023 (865)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

மறம், மானம், மாண்ட வழிச்செலவு, தேற்றம் இந்த நான்கும் படைக்கு பாதுகாப்பு என்றார் குறள் 766 இல்.


சரி, இதுவெல்லாம் அமைந்துவிட்டது, அடுத்து என்ன?


அடுத்து, போர் என்றால், அதாவது, சோதனை என்றால் கிளம்பிச் செல்வதுதான் தானை என்கிறார். தானை என்றால் படை.


அதுவும் எப்படி முதல் அடி நம்ம அடியாக இருக்கணும் என்பது போல!


தார் என்றால் மாலை, முண்ணனிப் படை இப்படிப் பல பொருள்கள் இருக்கு.


ஆண்கள் அணியும் மாலைக்குத் தார் என்றார்கள், பண்டையக் காலத்தில்! இதை நாம் முன்பு ஒரு முறை பார்த்துள்ளோம். காண்க 08/03/2022 (375).


அதாவது, எதிரிகள் நம்மைத் தாக்க வருகிறார்கள் என்றால் வெற்றி மாலையை முதலிலேயே சூடிக் கொண்டு (action in advance) போருக்குக் கிளம்பி வெற்றி நடை போட வேண்டியதுதான் என் கிறார்.

Action in advance என்பது ஒரு முக்கியமான் உளவியல் வித்தை. இது தெரிந்தால் நினைத்ததை அடையலாம் என்கிறார்கள். உங்களுக்கு ஒரு கதை தெரியும்தானே!

ஓரு காலத்தில், ஒரு ஊரில் மழையே இல்லையாம். அந்த ஊர் பெரியவர், ஒரு நாள், அந்த ஊரில் உள்ளவர்களை அழைத்து “எனக்கு இறைவன் வந்து கணவில் சொன்னார். நாளைக்கு மழை பெய்யப் போகிறது. அதனால், எல்லாரும் அந்தத் திடலுக்கு வாருங்கள். மேற்கொண்டு வேளாண்மைச் செய்வதைப் பற்றி கலந்து ஆலோசிப்போம்” என்றாராம்.


இந்தப் பெரியவர்க்கு என்ன ஆச்சு? என்று பேசிக் கொண்டார்களாம். இருந்தாலும்,அனைவருக்கும் ஒரே ஆர்வம். இதெல்லாம் நடக்குமான்னு ஒரு சந்தேகம். இருந்தாலும் என்னதான் நடக்கப் போகுதுன்னு வேடிக்கைப் பார்ப்போம் என்று போனார்களாம். எல்லாரும்கூடியாகி விட்டது. மழையைக் காணோம்.

ஐயா, பெரியவரே, நீங்கச் சொன்னதை நம்பி நாங்கள் எல்லாரும் வந்திருக்கோம். எங்கே மழையைக் காணோம் என்றார்களாம்.


கொஞ்சம் பொறுங்க. நீங்க நம்பி வந்திருக்கீங்களா, இல்லையான்னு இன்னும் கொஞ்ச நேரத்திலே தெரியும். இன்னும் ஒருத்தர் வரலை. அவரும் வந்துடட்டும் என்றாராம்.

என்ன ஆச்சர்யம். அந்த ஒருத்தரும் வந்தாராம்.அவர் வந்த உடனே மழையும் வந்து விட்டதாம்!

எல்லாருக்கும் இது என்ன விந்தையாக இருக்கேன்னு அந்தப் பெரியவரிடம் கேட்டார்களாம்.

அவர் அதற்கு, நாம முதலிலே அவர் ஏன் தாமதமாக வந்தார் என்று கேட்போம் என்றாராம்.

அதற்கு, தாமதாமாக வந்தவர் சொன்னாராம்: ஐயா தாமதத்திற்கு மன்னிச்சுக்கோங்க. நீங்க மழை வரும் என்று சொன்னதாலே, அதிகாலையிலேயே சென்று என் வயலை எல்லாம் சீர் செய்து உழுதுவிட்டேன். ரொம்ப நாளாக அப்படியே போட்டு விட்டேன் அல்லவா அதான் கொஞ்சம் நேரம் அதிகமாயிட்டுது. அது மட்டுமல்ல, மழை வந்தால் ஒரு குடை வேண்டுமே என்று எனது பழையக் குடையச் சரி செய்து எடுத்து வருவதற்குள் தாமதாமாகிவிட்து. கோபித்துக் கொள்ள வேண்டாம் என்று சொன்னாராம்.


பெரியவர் கேட்டாராம், நீங்களெல்லாம் உண்மையிலேயே நம்பித்தான் வந்திங்களா? சபையில் பெரும் அமைதி. இது நிற்க.


நம்பிக்கை. நம்பிக்கை, அசைக்க முடியாத நம்பிக்கை. அதனுடன் அதை நோக்கியப் பயணமும்! இதுதான் வெற்றிக்கு அடிப்படை. தேர்வுகளில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களானாலும் சரி, பெரும் வெற்றியாளர்கள் ஆனாலும் இந்த வழியில் வந்ததாகத்தான் உறுதி செய்கிறார்கள். இதைத்தான் உளவியல் வல்லுநர்கள் “Action in advance” அதாவது நம்பிக்கையோடு முன் கூட்டியே திட்டமிடுதல் என்கிறார்கள்.


சரி, நாம் குறளுக்கு வருவோம்.

தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த

போர்தாங்கும் தன்மை அறிந்து.” --- குறள் 767; அதிகாரம் – படை மாட்சி


தலை வந்த போர் தாங்கும் தன்மை அறிந்து = நம்மைத் தாக்கவரப்போகும் படையின் ஆற்றலைக் கணித்து; தார் தாங்கிச் செல்வது தானை =வெற்றி மாலைகளை அணிந்து கொண்டு முன்னணிப் படைகளைச் செலுத்தி வெற்றி நடை போடுவதுதான் படை.


நம்மைத் தாக்கவரப்போகும் படையின் ஆற்றலைக் கணித்து வெற்றி மாலைகளை அணிந்து கொண்டு முன்னணிப் படைகளைச் செலுத்தி வெற்றி நடை போடுவதுதான் படை.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Kommentare


Post: Blog2_Post
bottom of page