02/04/2023 (759)
சரி, பகைவனின் துணைகளைக் காலி பண்ணிட்டு, நம்ம ஆளுங்களையும், நம்ம பழைய நண்பர்களையும் பத்திரப்படுத்தியாகிவிட்டது. அடுத்து என்ன செய்யனும்?
முதலில் என்னவெல்லாம் செய்தால் பகையை வெல்ல முடியும் என்று ஆராயந்து, அந்தப் பல்வேறு வழிமுறைகளின் நன்மை தீமைகளைச் சீர் தூக்கிப் பார்த்து, அதிலே எது சிறந்தப் பலனைக் கொடுக்கும் என்பதைத் தெரிவு செய்ய வேண்டுமாம்.
பிறகு, அந்தத் தேர்ந்தெடுத்த வழியில் சென்றால், நமக்கு ஏற்படும் நல் வாய்ப்புகளை எவ்வாறு நன்றாகப் பயன்படுத்துவது என்ற செயல்வகையும் தெரியனுமாம்.
அப்புறம், தேர்ந்தெடுத்த முடிவை தலைமைக்கு குழப்பம் இல்லாமல் தெரிவிக்கனுமாம்.
தலைமையிடம் போய், இது இப்படி, அது அப்படி, நீங்க என்ன சொன்னாலும் நான் அதன்படி என்று மண்டி போடக் கூடாதாம்!
“தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு.” --- குறள் 634; அதிகாரம் – அமைச்சு
தெரிதலும் = ஒரு செயலைச் செய்து முடிக்க பல வழிமுறைகள் இருப்பின் அவை அனைத்தையும் ஆராய்ந்து அதில் எது நன்மை பயக்குமோ அதைத் தெரிவு செய்தலும்;
தேர்ந்து செயலும் = தேர்ந்தெடுத்த வழியில் சென்றால், ஏற்படும் நல் வாய்ப்புகளை எவ்வாறு நன்றாகப் பயன்படுத்துவது என்ற செயல்வகையும்;
ஒருதலையாச் சொல்லலும் = தலைமையிடம் குழப்பம் இல்லாமல் சொல்லுதலும்;
வல்லது அமைச்சு = வல்லவனே அமைச்சனாவான்.
ஒரு செயலைச் செய்து முடிக்க பல வழிமுறைகள் இருப்பின், அவை அனைத்தையும் ஆராய்ந்து அதில் எது நன்மை பயக்குமோ அதைத் தெரிவு செய்தலும், அவ்வழியில் சென்றால், ஏற்படும் நல் வாய்ப்புகளை எவ்வாறு நன்றாகப் பயன்படுத்துவது என்ற செயல்வகையும், ஆராய்ந்த அந்த முடிவினைத் தலைமையிடம் குழப்பம் இல்லாமல் சொல்ல வல்லவனே அமைச்சனாவான்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள் முதலான: www.easythirukkural.com)
Comments