11/12/2023 (1010)
அன்பிற்கினியவர்களுக்கு:
ஒரு துறையில் முறையான பயிற்சி இல்லாதவர் அந்தத் துறையில் இருக்கும் ஆழ்ந்த பொருள்தரும் நூல்களைக் கண்டு விளங்கிக் கொள்ளவும் முடியாது. யாருக்கும் விளக்கவும் முடியாது. அதுபோலத்தான் அருளைப் பழகா நெஞ்சத்தினின்று எழும் செயல்கள், அறச்செயல்களைப் போல் தோன்றினாலும் அவை உண்மையில் அறச்செயல்களாக இருக்கா. விளம்பரத்திற்குச் செய்து தன்னை உயர்த்திக் கொள்ள இருக்கலாம். அவ்வளவே!
நம்மாளு: அதான் ஐயா, நம் பேராசான், அவன் தேறமாட்டான் என்று முன்பே சொல்லிட்டாரே! “எல்லாம் நடிப்பா கோபால்?” என்பதுபோல நடிப்பார்கள். அது ஏதோ நமக்குத் தெரியாமலே போகும் என்ற நினைப்பு வேறு!
சரி, நாம் குறளுக்கு வருவோம்.
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம். – 249; - அருளுடைமை
தெருளாதான் = தெளிவில்லாதவர்; தேரின் = ஆராய்ந்துப் பார்த்தால்;
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் = ஒரு துறையில் எந்தத் தெளிவுமில்லாதவர் அந்தத் துறையில் உள்ள சிறந்த நூல்களை ஆராய்ந்து அதன் உட்பொருளைக் கண்டேன் என்று சொன்னால் எப்படி இருக்குமோ; அருளாதான் செய்யும் அறம் = அப்படித்தான் அருள் இல்லா உள்ளத்தினர் செய்வதாகச் சொல்லும் அறச் செயல்கள்.
ஆராய்ந்துப் பார்த்தால், ஒரு துறையில் எந்தத் தெளிவுமில்லாதவர் அந்தத் துறையில் உள்ள சிறந்த நூல்களை ஆராய்ந்து அதன் உட்பொருளைக் கண்டேன் என்று சொன்னால் எப்படி இருக்குமோ, அப்படித்தான், அருள் இல்லா உள்ளத்தினர் செய்வதாகச் சொல்லும் அறச் செயல்கள்.
சரி, முடிவுரையாக ஒன்றைச் சொல்ல வேண்டும். அருளை ஒழுக வேண்டும் என்று பலவாறாகச் சொன்ன நம் பேராசான் அந்த அருளை எப்படி உணரலாம் என்று சொல்லாமல்விட்டோமே என்று நினைத்திருப்பார் போலும்.
நமக்கு ஏற்கெனவே ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். அஃதாவது, ஒருவர் நமக்குச் செய்த நன்மை ஒன்றை நினைக்கும்போது அவர் நமக்கு எந்தத் துன்பங்களை இழைத்தாலும் தடுத்துக் கடந்து செல்லுங்கள். வன்முறைக்கு வழி கோலாதீர்கள் என்றார். காண்க 06/05/2021. மீள்பார்வைக்காக:
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும். -109; -செய்ந்நன்றி அறிதல்
இது ஒரு படி நம் உள்ளத்தில் மாற்றம் ஏற்பட!
பிறரின் குற்றங்களை ஆராயும்போது நமது குற்றங்களையும் அதேபோன்று ஆராய முற்பட்டால் நம் உள்ளத்தில் ஒரு தெளிவு பிறக்கும் என்றார், இது அடுத்தப் படிநிலை. காண்க 22/06/2021.
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னு முயிர்க்கு. - 190; - புறங்கூறாமை
இப்படிப் படிப்படியாக நம் உள்ளத்தை அருளுக்குத் திருப்பிக் கொண்டுவரும் நம் பேராசான், அடுத்து ஒரு உவமையை அல்ல, ஒரு உணர்வை, அனுபவத்தை நினைவில் வையுங்கள் என்கிறார். அது என்ன?
வலியவர்கள், பெரியவர்கள் நம்மை நசுக்கும்போது நாம்படும் துன்பங்களும் துயரங்களும் எவ்வாறு இருக்கும் என்று கேட்கிறார். அதனை அப்படியே மனத்தில் நிறுத்துங்கள். உங்களைவிட மெலியவர் உங்களிடம் ஒன்றை எதிர்பார்க்கும்போது நீங்கள் எப்படிச் செயலாற்றுகிறீர்கள் என்று எண்ணிப்பாருங்கள். அப்போது தெரியும், உங்கள் உள்ளத்தில் அருள் உள்ளதா, இல்லையா என்று! அழகாக, அழுத்தமாக, ஆழமாக முடிக்கிறார் அருளுடைமையை!
வயதாவதால் நாம் வளர்வதில்லை!
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து. – 250; - அருளுடைமை
தான் தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து = அருள் இல்லாதவன் தன்னின் எளியார் மேல் அறமற்றச் செயல்களைச் செய்யத் துணியும்போது; வலியார் முன் தன்னை நினைக்க = அறமல்லாத செய்கைகளைத் தங்கள் மீது ஏவும் வலியவர்கள் முன் தமது நிலையினை நினைக்க தம் மனது எங்ஙனம் பதை பதைக்கும் என்பதை மறக்கலாகுமா? அவ்வாறு நினைக்கின் அருள் பிறக்கும்.
அருள் இல்லாதவன் தன்னின் எளியார் மேல் அறமற்றச் செயல்களைச் செய்யத் துணியும்போது அவ் வலியவர்கள் முன் தமது நிலையினை நினைக்க தம் மனது எங்ஙனம் பதை பதைக்கும் என்பதை மறக்கலாகுமா?
அவ்வாறு நினைக்கின் அருள் பிறக்கும். மற்றவரை வருத்த மனம் துணியாது என்கிறார்.
இங்கு மெலியார் என்று மக்களாகிய உயர்திணையைக் குறிப்பதுபோல் தோன்றினாலும், பொதுப்பட அனைத்து உயிர்களையும் குறிக்கும். அனைத்து உயிர்களின் மேலும் அன்பு செலுத்துதல் அருளுடைமையாம்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Yorumlar