29/08/2023 (907)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
கபடிப் பந்தயத்தில் யார் யார் பங்கேற்கிறார்கள், அவர்களின் திறம் எத்தகையது என்பன ஒருவனுக்குத் தெரியும். வெற்றி இலக்கை எட்ட அவனும் பல பயிற்சிகள் செய்துள்ளான். யார் யாரை எப்படிச் சமாளித்து முன்னேறிச் செல்வது என்பதையும் அவன் கணக்கிட்டு வைத்துள்ளான். வெல்வது என்பது அவனின் இலக்கு!
அன்றைய தினம் போட்டி ஆரம்பமாகிறது. அவனிடம் பரபரப்பில்லை. அது மட்டுமல்ல, அவன் போட்டியைத் தவிர்த்து விடுகிறான். அரங்கத்தில் அமர்ந்து கொண்டு போட்டியை நிதானமாகப் பார்த்துக் கொண்டுள்ளான்!
ஏன் அவன் அமர்ந்துவிட்டான்? ஏன் கலந்து கொள்ளவில்லை என்று அனைவர்க்கும் வியப்பு! சிலர் அவனை அணுகி ஏன் கலந்து கொள்ளவில்லை என்று கேட்கத்தானே செய்வார்கள்? கேட்கிறார்கள். அவன் புன்முறுவலுடன் அடுத்த முறை கலந்து கொள்வேன் என்று விடையளிக்கிறான்! அவ்வளவே.
மனத்தில் எந்தவித சலனமும் இல்லை. போட்டியைக் கண்டுவிட்டு வெற்றி பெற்றவர்களை வாழ்த்திவிட்டு கிளம்பிவிடுகிறான்.
அவனின் செயல் புதிராக இல்லையா? அவனின் நெருங்கிய நண்பன் ஒருவன் என்னப்பா என்ன சேதி என்கிறான்? குறள் 876 ஐப் படித்தேன்; போட்டியைத் தவிர்த்தேன் என்று சொல்லிவிட்டு நகர்ந்து விடுகிறான்.
நம்மாளு: குறள் 876 பகைத்திறம் தெரிதல் அதிகாரத்தில் உள்ள ஒரு குறள். அதற்கும் இவன் செயலுக்கும் என்ன சம்பந்தம்?
ஆசிரியர்: இருக்கு தம்பி. அவனுக்கு ஏதாவது முடியாமல் இருக்கும். அதனால், அவன் எந்தக் காரணமும் கூறாமல் ஒதுங்கியிருக்கலாம்.
முன்னேற வேண்டும் என்பவர்களுக்கு மிக முக்கியமானக் குறள்தான் 876. அது மட்டுமல்ல அடுத்து வரும் குறளும் அவ்வாறே! எப்போது போட்டியில் இருந்து ஒதுங்கி நிற்க வேண்டும்; ஒதுங்கி நிற்கும் காரணத்தைச் சொல்லலாமா வேண்டாமா என்று எடுத்துச் சொல்லும் குறள்கள். ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
“தேறினுந் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்.” --- குறள் 876; அதிகாரம் – பகைத்திறம் தெரிதல்
அழிவின்கண் = நமக்குள்ளேயே சில தடைகள், வீழ்ச்சிகள் தோன்றிவிடும்போது, தன் நிலை சரியாகும்வரை; தேறினும் = எதிரில் இருப்பவனை நன்கு ஆய்ந்து இவன் சரியான பகைவன்தான் வென்றுவிடலாம் இல்லை நட்பு கொண்டு அவனை மாற்றிவிடலாம் என்று தெளிந்தாலும்; தேறா விடினும் = இல்லை ஒரு முடிவுக்கு வர முடியவில்லை என்றாலும்; தேறான் = இக்கட்டான சூழ்நிலையில் உள்ளவன்; பகான் விடல் = வேறுபாடு காட்டி எதையும் செய்யாமல் விடுவது நன்று.
நமக்குள்ளேயே சில தடைகள், வீழ்ச்சிகள் தோன்றிவிடும்போது, தன் நிலை சரியாகும்வரை, எதிரில் இருப்பவனை நன்கு ஆய்ந்து இவன் சரியான பகைவன்தான் வென்றுவிடலாம், இல்லை நட்பு கொண்டு அவனை மாற்றிவிடலாம் என்று தெளிந்தாலும், இல்லை ஒரு முடிவுக்கு வர முடியவில்லை என்றாலும், இக்கட்டான சூழ்நிலையில் உள்ளவன், வேறுபாடு காட்டி எதையும் செய்யாமல் விடுவது நன்று.
காலில் அடிபட்டுள்ளதா கால் சரியாகும்வரை ஓய்வு அவ்வளவே!
கால் உடைந்துவிட்டது என்று ஊருக்குச் சொல்வது நல்லதன்று! அதுவும் குறிப்பாக பகையா நட்பா என்று தெரியாமல் சொல்வதைத் தவிர்க்க. இந்தக் கருத்தை அடுத்தக் குறளில் சொல்கிறார். நாளைப் பார்ப்போம்.
பி.கு.: இந்தக் குறள் நிரல் நிரை அணி போன்றும் அமைந்துள்ளது சிறப்பு. தேறினும் தேறான் = பகைதான் என்று தெளிந்தாலும் விட்டு வைத்தலும்; தேறாவிடினும் பகான் = பகை என்று ஒரு முடிவிற்கு வரமுடியவில்லை என்றால் விலகிச் செல்லாமலும்.
அஃதாவது, முதல் அடியில் உள்ள முதல் சொல் இரண்டாவது அடியின் முதல் சொல்லுடன் இணைந்தும் (தேறினும் - தேறான்), முதல் அடியில் உள்ள இரண்டாம் சொல் இரண்டாம் அடியில் உள்ள இரண்டாம் சொல்லுடன் இணைந்தும் (தேறாவிடினும் – பகான்) பொருள் தருமாறு அமைக்கப்பட்டுள்ளது ஒரு சிறப்பு.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
On a lighter vein i am reminded of Rajnikanth..He might have read these thirukkurals..!