13/02/2023 (711)
‘படி எடுப்பது’ என்றால் copy எடுப்பது.
‘படிவத்தர்’ என்றால்? யாரையாவது பார்த்து copy அடிப்பது. யாரைப் பார்த்து படிவத்தர் (வடிவத்தர்) ஆகனும்?
துறந்தாரைப் பார்த்து! அவர்களைப்போலவே வடிவம் போட்டுக் கொண்டு அவர்களைப் போலவே நடக்கனும். ஏன்?
ஏன் என்றால், துறவிகளுக்கு எப்போதும் இந்த உலகம் தனி ஒரு மரியாதையை அளிக்கிறது. இந்த உலகம் எத்தனை முறை ஏமாற்றப்பட்டாலும், எப்போதும் தன் நம்பிக்கையை மாற்றிக் கொள்வதில்லை! இந்தத் துறவு வேடம், உளவறிய ஒரு நல்ல வேடம் என்று நம் பேராசான் சொல்கிறார்.
வேடம் போட்டுக் கொண்டு என்ன செய்ய வேண்டும்?
இறந்து, ஆராய்ந்து ஒற்று பார்க்க வேண்டும். ‘இறந்து’ என்றால் இங்கே ‘கடந்து’ என்று பொருள். எதைக் கடந்து? தடைகளைக் கடந்து! அதாவது, எந்த இடத்திலும் நுழைந்து, அது மட்டுமல்லாமல், ஆராய்ந்து உளவு பார்க்கனுமாம்!
சரி, மாட்டிக் கொண்டால்? அவர்கள் ‘அடித்துக் கேட்டாலும்’ தான் யார் என்பதைச் சொல்லக் கூடாதாம். அன்பாக கேட்டாலும் சொல்லக் கூடாதாம்!
“துறந்தார் படிவத்தர் ஆகி இறந்தாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று.” --- குறள் 586; அதிகாரம் – ஒற்றாடல்
துறந்தார் படிவத்தர் ஆகி இறந்து ஆராய்ந்து = முற்றும் துறந்த துறவிகளின் வேடம் பூண்டு, அவர்களைப் போலவே விரதங்களைக் கடைப்பிடித்து, புக முடியாத இடத்தை எல்லாம் கடந்து, ஆராய்ந்து அறிந்து;
என்செயினும் சோர்விலது ஒற்று = அவர்கள் அன்பைக் காட்டினாலும், துன்பத்தை அளித்தாலும், அதற்கு மயங்காமலும், அஞ்சாமலும் எடுத்துக் கொண்டச் செயலை சோர்வில்லாது முடிப்பது ஒற்று.
முற்றும் துறந்தத் துறவிகளின் வேடம் பூண்டு, அவர்களைப் போலவே விரதங்களைக் கடைபிடித்து, புக முடியாத இடத்தை எல்லாம் கடந்து, ஆராய்ந்து அறிந்து; அவர்கள் (மாற்றார்) அன்பைக் காட்டினாலும், துன்பத்தை அளித்தாலும், அதற்கு மயங்காமலும், அஞ்சாமலும் எடுத்துக் கொண்ட செயலைச் சோர்வில்லாது முடிப்பது ஒற்று.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments