07/12/2022 (643)
ஆராய்ந்து வேலைக்கு எடுக்கவேண்டும் என்பதுதான் தெரிந்து தெளிதலின் மையக் கருத்து. அப்படி எடுத்தவர்களை நன்கு பயன்படுத்த வேண்டும்.
சில சமயம், நன்றாக ஆராய்ந்து வேலைக்கு எடுத்துடுவாங்க. அவங்களும், அவங்க வேலையைச் செய்து கொண்டிருப்பார்கள். ஆனால், அவங்க செய்கின்ற செயல்களில் எல்லாம் ஒரு சந்தேகம் வந்துவிடும்.
மேலும் சிலர் என்ன செய்வாங்க என்றால், நன்றாக ஆராய்ந்து பணிக்கு அமர்த்திவிடுவார்கள். ஆனால், அவர்களுக்கு சரியான வேலையைக் கொடுக்க மாட்டாங்க!
இப்படிக்கூட நடக்குமா? ஆம். அவங்களுக்கு இந்த வேலையைக் கொடுக்கலாமா, வேண்டாமா? அப்படின்னு ஒரு தயக்கம்.
மேலும் சிலர் என்ன செய்வார்கள் என்றால், திறமைக்கு ஏற்றவாறு வேலையைக் கொடுக்காமல் சாதாரணமான வேலைகளைக் கொடுத்துக் கொண்டிருப்பார்கள்!
Software அதாவது மென்பொருள் நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்திவிட்டு “bench work” கொடுக்கறாங்க! அது என்ன “bench work” என்றால் உட்கார வைத்து வேலையே கொடுக்காமல் சம்பளம் மட்டும் கொடுப்பது!
வேலை இல்லாமல் அமர்ந்திருக்கும் காலம் பல வகையில் நிகழலாம். ஒரு பணிக்கும் (project) இன்னொரு பணிக்கும் இடைப்பட்ட காலமாக இருக்கலாம். பணி வரும் என்று எதிர்பார்த்து, அது வருவதற்கு தாமதமாகிறது என்பதால் இருக்கலாம். எங்களிடம் இத்தனை ஆட்கள் (man power) இருக்கிறார்கள் என்பதை அறிவிக்க இருக்கலாம். இப்படி பல விதம்.
எப்படி இருந்தாலும், இது ‘நல்லதோர் வீணையை நலம் கெடச் செய்வதுதான்’. இந்த பணி இடைக்காலத்தை மிகவும் பயனுள்ளதாக்க பல வழிமுறைகளை வல்லுநர்கள் வகுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படியும் முடியவில்லையா, இருக்கவே இருக்கு “வீட்டுக்கு அனுப்புவது” (hire and fire)!
இந்த மாதிரியெல்லாம், அந்தக் காலத்தில் இருந்ததா என்று தெரியவில்லை. இது நிற்க.
நம் பேராசான் சொல்கிறார், ஆராய்ந்து பணிக்கு அமர்த்தியாகிவிட்டதா, அதன் பிறகு அவர்களைச் சரியாகப் பயன்படுத்து என்பதுதான்.
“தேறற்க யாரையும் தேராது தேர்ந்த பின்
தேறுக தேறும் பொருள்.” --- குறள் 509; அதிகாரம் – தெரிந்து தெளிதல்
தேராது = ஆராயாது; தேறற்க = தேர்ந்தெடுக்காதே; தேறுக = சேர்த்துக் கொள்க; தேறும் = கிடைக்கும்/தெளியும்
யாரையும் தேராது தேறற்க = யாரையும் ஆராயாமல் சேர்த்துக் கொள்ள வேண்டாம்; தேர்ந்த பின் = ஆராய்ந்து சேர்த்துக் கொண்டபின்; தேறும் பொருள் தேறுக = அவர்களைப் பயன்படுத்திக் கொள்க.
“தேறும் பொருள் தேறுக” என்பதற்கு அவர்களின் வேலைகளில் சந்தேகப்படாதே என்றும் அறிஞர் பெருமக்கள் உரை காண்கிறார்கள். இதுவும் முக்கியம்தான்.
“தெரிந்து தெளிதல்” அதிகாரம் பொருட்பாலில் வருவதால் “பொருள்” அது ரொம்ப,ரொம்ப முக்கியம்! வேலைக்கு வைப்பதே வளத்தைப் பெருக்கத்தான்!
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
Thiruvalluvar is a great HR Management consultant.