top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

தாளாண்மை என்னும் ... 613

Updated: Mar 20, 2023

17/03/2023 (743)

தாளாண்மை, வேளாண்மை, வாளாண்மை ...


தாளாண்மை எனும் சொல்லை நம் பேராசான் இந்த ஆள்வினை உடைமை என்ற அதிகாரத்தில்தான் இரு இடங்களில் பயன்படுத்துகிறார்.


தாளாண்மை = தாள் + ஆண்மை; ஆண்மை = ஆளும் தன்மை


உள்ளே இருக்கும் உந்து சக்தி அதாவது ஊக்கத்தின் வெளிப்பாடு செயல். முயற்சி செய்கிறோம்; வெற்றியும் பெறுகிறோம்.


ஊக்கம் – முயற்சி – செயல்; Input – process – output; இது ஒரு முறைமை.


தாள் என்றால் கால், பூவின் இதழ், காகிதத் தாள் என்று பல பொருள்களில் பயின்றுவருகிறது. தமிழ் அறிஞர்கள் பலரும் ‘முயற்சி’ என்ற பொருளும் இருப்பதை பதிவு செய்திருக்கிறார்கள்.


தாளாண்மை என்றால் முயற்சிகளை ஆளும் தன்மை என்று எடுத்துக் கொள்ளலாம். ஏன் என்றால் முயலுதல் (process) மிக முக்கியம். அதைச் சரியாக நிருவகித்தால் விளைவுகள் வேண்டியப் பலனைத் தரும்.


வேள்பாரி, தமிழ்வேள், முருகவேள் என்றெல்லாம் சொல்கிறோம். வேள் என்றால் அரசன், தலைவன் என்று பொருள்.


‘நடிகவேள்’ என்றால் நடிப்பில் உச்சம் தொட்டவன், தலைவன், சிறந்தவன், மன்னன் என்று பொருள். நாடகத்துறையில் மிகப் பெரிய ஆளுமையாக வாழ்ந்து மறைந்தவர் மதராஸ் ராஜகோபாலன் ராதா கிருஷ்ணன் என்கிற எம்.ஆர். ராதா (M.R.Radha) அவர்கள். அவர் ‘போர்வாள்’ எனும் நாடகத்தில் சிறப்பாக நடித்தமைக்காக பட்டுக்கோட்டை அழகிரி அவர்கள் அளித்தப் பட்டம்தான் “நடிகவேள்”.


பண்டையக் காலத்தில், முதன் முதலாக, தலைவனின் கடமைகளாக கால் நடைகைளை வளர்த்தல், நீர் பாசனங்களுக்கு வழி வகுத்தல், நிலத்தினை மேம்படுத்துதல், பொருட்களை விளைவித்தல், விளைவித்ததை அனைவருக்கும் பகிர்ந்து அளித்தல் என பல வகையானச் செயல்களாகத்தான் இருந்திருக்கும். எனவே அது “வேளாண்மை” என்று வழங்கப்பட்டிருக்கும்.


தலைவனின் மிக உயர்ந்தப் பண்புகளாக கொடை, ஈகை போன்றவை இருக்கவேண்டும். அதனால், வேளாண்மை என்றால் கொடை, ஈகை, உபகாரம் செய்தல், உதவி செய்தல் போன்ற பொருள்படும்படியும் ஆகிவருதலைப் பார்க்க முடிகின்றது. இது நிற்க.


வேளாண்மை என்றால் தலைவனின் ஆளும் தன்மை. அவனுக்கு எது பெருமை என்ற கேள்விக்குப் பதில்தான் இந்தக் குறள்.


சரி நாம் குறளுக்கு வருவோம்.


தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே

வேளாண்மை என்னும் செருக்கு.” --- குறள் 613; அதிகாரம் – ஆள்வினை உடைமை


தகைமை = சிறந்த பண்பு; செருக்கு = பெருமை;

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே = முயற்சிகளை ஆளும் தன்மை என்னும் சிறந்த பண்பினிடம் தங்கிற்றே;

வேளாண்மை என்னும் செருக்கு = தலைவனின் ஆளும் தன்மை என்னும் பெருமை.


தலைவனின் ஆளும் தன்மை என்னும் பெருமை, முயற்சிகளை ஆளும் தன்மை என்னும் சிறந்த பண்பினிடம் தங்கியுள்ளது.


சரி இது நிற்க.

மற்ற உரைகளைப் பார்ப்பதும் நலம்.

பரிமேலழகப் பெருமானின் உரை: முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த குணத்தின்கண்ணே நிலை பெற்றது; எல்லார்க்கும் உபகாரம் செய்தல் என்னும் மேம்பாடு.


பேரறிஞர் மு.வரதராசனார்: பிறர்க்கு உதவி செய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை, முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைத்திருக்கின்றது.


அதாவது, தாளாண்மை = முயற்சி; வேளாண்மை = உதவி செய்தல் என்று பொருள் சொல்லியிருக்கிறார்கள்.


வாளாண்மையை நாளை பார்க்கலாம்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள் முதலான: www.easythirukkural.com)




Comments


Post: Blog2_Post
bottom of page