26/10/2022 (602)
தமிழில் ‘இழிவு’ , 'இளிவு’ என்று இரு சொற்கள் இருக்கின்றன. இத இரண்டுக்குமிடையே நுட்பமான வேறுபாடு இருக்கிறதாம்.
இழி என்றால் கீழே இறங்குவது. ‘இழி தரும் அருவி’ என்றால் மலையில் இருந்து கீழே இறங்கும் அருவி என்று பொருள்.
நாம் ஏற்கனவே ஒரு குறளைப் பார்த்துள்ளோம். காண்க 08/08/2022 (527).
“தலையின் இழிந்த மயிர் அணையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.” --- குறள் 964; அதிகாரம் –
நல் குடியில் பயனிக்கும் மக்கள், தம் உயர்ந்த, பண்புள்ள தளத்தை விட்டு இழி செயல்கள் செய்து தாழ்ந்து விடுவார்களானால், அவர்களை, தலையில் இருந்து உதிர்ந்த ரோமங்களைப் போல ஒரு பொருட்டாக யாரும் மதிக்க மாட்டார்கள்.
இந்தக் குறளில் ‘இழிந்த’ என்பது தலையில் இருந்து ‘விழுந்த’, ‘இறங்கிய’, ‘உதிர்ந்த’ என்ற பொருளில் வருகிறது.
‘இழி செயல்’ என்றால் ‘தாழ்ந்த செயல்’. தன் தரத்திற்கு தாழ்ந்து ஒரு செயலைச் செய்வது.
ஆனால். ‘இளி செயல்’ என்றால் ‘வெட்கக் கேடான செயல்’, ‘அவமானத்தைத் தரும் செயல்’, ‘அருவருப்பானச் செயல்’. இழி செயல்களைவிட இளி செயல்கள் கீழானதாம். இளி செயலானது அறிவும், மான உணர்ச்சியும் இல்லாதுபோனால் வருமாம்.
இந்த நுட்பமான வேறுபாட்டினைத் தெரிந்து கொள்வது நல்லது என்று என் ஆசிரியர் சொன்னார். மற்றும் ‘இளி’க்கு பதிலாக ‘இழி’ பயன்படுத்துவதும் சரியல்ல என்றும் கூறினார்.
சரி, இந்த சொல் ஆராய்ச்சி எதற்கு? குறள் 464ல் நம் பேராசான் பயன்படுத்தும் சொல் ‘இளி’.
“தெளிவு இலதனைத் தொடங்கார் இளிவு என்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்.” --- குறள் 464; அதிகாரம் – தெரிந்து செயல் வகை
இளிவு என்னும் ஏதப்பாடு அஞ்சு பவர் = ‘அறிவு கெட்டவன்’, ‘மானம் கெட்டவன்’ என்னும் இளிவு என்னும் குற்றப்பாடு வந்து சேருமோ என்று அஞ்சுபவர்;
தெளிவு இலதனைத் தொடங்கார் = செய்யும் செயலின் முடிவு இப்படித்தான் இருக்கும் என்று ஒரு தெளிவு இல்லாதிருந்தால் அந்தச் செயலைத் தொடங்கார்.
ஏதம் = குற்றம்.
அதாவது, இந்தச் செயலால் நம் முதலுக்கே மோசம் வந்துவிடுமோ என்று எண்ணுபவர்கள் அந்த வினையைத் தொடங்கவும் மாட்டார்.
நன்றி. மீண்டும் சந்திப்போம்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comentários