26/09/2021 (215)
ஒருவரிடம் நட்பு வைத்தாகிவிட்டது. காலம் செல்லச் செல்லதான் மெள்ளப் புரிகிறது. அது சரியான நட்பு இல்லை. அந்த நட்பினால் தீமைதான் விளையும் என்று புலப்படுகிறது. அது போன்ற நட்புதான் கூடா நட்பு.
மேலே புனுகு; உள்ளே கழுகு!
வள்ளுவப்பெருமானைக் கேட்டார்கள். ஐயா, இந்த நிலைக்கு என்ன வழி?
பதில் கூடா நட்பு எனும் அதிகாரத்தில் இருக்கிறது என்றார்.
மகாத்மா காந்தி தனது இறுதிக்காலத்தை அறிந்தே இருந்தார் என்று சொல்லப் படுகிறது. ஐந்து முறை மகாத்மாவின் மேல் கொலை முயற்சி நடந்ததாகச் சொல்கிறார்கள். (Beyond Doubt: A Dossier on Gandhi's Assassination – Teesta Setalvad). ஆறாவது முறைதான் அந்தக் கொடுமை நிகழ்கிறது.
தொழுத கைதான், துப்பாக்கி ஆங்கே மறைந்திருந்தது
அழுத முகம் தான், ஆனால் ஆங்கே ஆபத்து ஒளிந்திருந்தது
வணக்கம்தான் செய்கிறான் - ஆனால்
உள்ளே பிணக்கம் கொண்ட பாம்பு படமெடுத்துக் கொண்டிருந்தது.
தொழுகின்றானே என்று தூக்கி நிறுத்தவா?
அழுகின்றானே என்று ஆறுதல் சொல்லவா?... ஒரு கணம்தான்.
ஓங்கி ஒலித்தது துப்பாக்கி.
உலகெங்கும் ஒப்பாரி.
ஐயகோ, அண்ணல் மறைந்தார்.
வள்ளுவப் பெருந்தகை காட்டியிருந்த குறிப்பு நிகழ்ந்தே விட்டது …
“தொழுதகையுள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார்
அழுத கண்ணீரும் அனைத்து.” --- குறள் 828; அதிகாரம் – கூடா நட்பு
ஒன்னார் தொழுதகையுள்ளும் படை ஒடுங்கும் = பகைவரின் தொழுத கையுள்ளும் தாக்கும் படைக்கருவி மறைந்திருக்கலாம்; ஒன்னார் = பகைவர்; ஒடுங்கும் = மறைந்திருக்கும்; அழுத கண்ணீரும் அனைத்து = (பகைவர்) அழுத கண்ணீரும், அதே போலத்தான், நெஞ்சத்தில் வஞ்சத்தை மறைத்திருக்கும்.
நண்பனைப் போல் நடித்திருக்கும் பகைவன் தொழுவான், அழுவான். புறத்திலே கொலைக் கருவி மறைந்திருக்கலாம். அகத்திலே அழுக்குகள் ஒளிந்திருக்கலாம் என்பது தான் இந்தக் குறளின் பொருள்.
என்ன செய்ய? வள்ளுவப் பெருமானையே கேட்போம்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன், உங்கள் மதிவாணன்.
Comments