19/11/2023 (988)
அன்பிற்கினியவர்களுக்கு:
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை யென்னுஞ் செருக்கு. - 201; தீவினை அச்சம்
அறிஞர் பெருமக்களின் உரைகள்:
மணக்குடவப் பெருமான்: என்றுந் தீத் தொழில் செய்வார் அஞ்சார்: சீரியர் அஞ்சுவர், தீவினையாகிய களிப்பை. இஃது இதற்கு நல்லோர் அஞ்சுவரென்றது.
செருக்கு = களிப்பு.
பரிமேலழகப் பெருமான்: தீவினை என்னும் செருக்கு - தீவினை என்று சொல்லப்படும் மயக்கத்தை, தீவினையார் அஞ்சார் - முன் செய்த தீவினையுடையார் அஞ்சார், விழுமியார் அஞ்சுவர் - அஃது இலராகிய சீரியார் அஞ்சுவர்.
'தீவினை என்னும் செருக்கு' எனக் காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது. மேல் தொட்டுச் செய்து கைவந்தமையான் 'அஞ்சார்' என்றும், செய்து அறியாமையான் 'அஞ்சுவர்' என்றும் கூறினார். செருக்கு = மயக்கம்.
மூதறிஞர் மு. வரதராசனார்: தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார்; தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.
செருக்கு = செருக்கு.
அஃதாவது, இந்தக் குறளில் வரும் “தீவினை என்னும் செருக்கு” என்றத் தொடர்க்கு அப்படியே இடம் மாற்றாமல் பொருள் கொண்டுள்ளார்கள். அதற்கு அமைதியைக் கொடுப்பதற்காக மயக்கம், களிப்பு அல்லது அப்படியே செருக்கு என்றும் உரை தந்துள்ளார்கள்.
நம் பேராசான் “என்னும் செருக்கு” என்றத் தொடரைப் பயன்படுத்திய எட்டு குறள்களைப் பார்க்கும்போது பெரும்பான்மையான குறள்களுக்குச் செருக்கு என்பது நல்லதொரு பண்பாகவே சித்தரித்துள்ளார். புல்லறிவாண்மை என்னும் அதிகாரத்தில் உள்ள ஒரு குறளில் மட்டும் தவிர்க்க வேண்டிய பண்பாக சித்தரிப்பது போலத் தோன்றுகிறது. காண்க 18/11/2023 (987).
எனவே, “விழுமியார் தீவினை அஞ்சுவர் என்னும் செருக்கு” என்று மாற்றி அமைத்து பொருள் கொண்டால் என்னவென்று தோன்றுகிறது.
விழுமியார் = உயர்ந்தவர்கள், பண்பில் சிறந்தவர்கள், அற வழியில் நடப்பவர்கள்; தீவினை அஞ்சுவர் என்னும் செருக்கு = தீயச் செயல்களுக்கு அஞ்சுகின்ற பண்பினை உடையவர்களாவர்; தீவினையார் அஞ்சார் = தீயச் செயல்களைச் செய்வதையே வழக்கமாகக் கொண்டவர்கள் எதற்கும் அஞ்ச மாட்டார்கள்; செருக்கு = பண்பு.
உயர்ந்தவர்கள், பண்பில் சிறந்தவர்கள், அற வழியில் நடப்பவர்கள் தீயச் செயல்களுக்கு அஞ்சுகின்ற பண்பினை உடையவர்களாவர். ஆனால், தீயச் செயல்களைச் செய்வதையே தனது வழக்கமாகக் கொண்டவர்கள் எதற்கும் அஞ்ச மாட்டார்கள். உங்கள் கருத்து என்ன?
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments