10/06/2024 (1192)
அன்பிற்கினியவர்களுக்கு:
மக்கள் அனையர் கயவர் என்றார் முதல் குறளில். அஃதாவது, கயவர்களும் மக்களைப் போலவே இருப்பார்கள் – அவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்றார். அடுத்து எல்லாம் வல்ல தேவர்கள் என்று சொல்கிறோமே அவர்கள் நினைப்பதனைச் செய்வார்கள் என்று சொல்கிறார்கள். கயவர்களும் ஒரு வகையில் அவ்வாறே என்கிறார்.
தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான். – 1073; - கயமை
தேவர் அனையர் கயவர் = செயல்களில் கயவர்களும் தேவர்களைப் போலவே இருப்பார்கள்; அவரும் தாம் மேவன செய்து ஒழுகலான் = ஏனெனில், அவர்களும் தாம் நினைப்பதனைச் சாதிக்க முயல்வார்கள்.
செயல்களில் கயவர்களும் தேவர்களைப் போலவே இருப்பார்கள். ஏனெனில், அவர்களும் தாம் நினைப்பதனைச் சாதிக்க முயல்வார்கள்.
அதுமட்டுமன்று, அவர்களும் சுகபோகங்களில் திளைப்பார்கள். அஃது குறுகிய காலமானாலும்கூட. அஃதாவது, மாட்டிக் கொள்ளும்வரை!
ஊழ் என்னும் அதிகாரத்தில், திரு வேறு, தெள்ளியர் ஆதல் வேறு என்றார். காண்க 11/02/2021. மீள்பார்வைக்காக:
இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு. – 374; - ஊழ்
இது நிற்க. ரத்தக் கண்ணிர் என்னும் நாடகத்தைத் தமிழ்நாட்டில் உள்ள பலரும் அறிந்திருப்போம். அந்த நாடகத்திற்கு வசனம் எழுதியவர் திருவாரூர் தங்கராசு அவர்கள். நடிகவேள் எம். ஆர். இராதா அவர்கள் நடிப்பிலே அசத்தியிருப்பார்.
பணக்காரனாக இருந்த மோகன் ஒரு காந்தா என்னும் விலைமாதிடம் மயங்கி எல்லாம் இழந்துவிடுவார். குஷ்டம் என்னும் பெருவியாதியால் பாதிக்கப்பட்டு அந்த விலைமாதின் வீட்டில் இருந்து துரத்தியடிக்கப்படுவார்.
கற்கள் கொட்டிக்கிடக்கும் சாலையில் நடந்துச் செல்லும்போது அவர் விழுந்துவிடுவார். அப்பொழுது, அவர்தாம் மோகன் என்று அறியாமல் அவரின் மனைவி சந்திரா அவரைத் தொட்டுத் தூக்கி மீண்டும் நடக்க வழி செய்வாள்.
அங்கே ஒரு வசனத்தை வைத்திருப்பார் திருவாரூர் தங்கராசு.
அந்த வசனம் அப்படியே:
“… காந்தா எந்தனையோ வருஷம் இருந்தாள். என்னைத் தொட மாட்டேன்னு சொன்னாளே … என்னைத் தொடமாட்டேன்னு சொன்னாளே … இந்த அம்மா சோறு போட்ட கையாலே தொட்டும் தூக்கினாங்களே …”
என்று சொல்லிவிட்டு அடுத்து அவர் சொல்வதுதான் வசனத்தின் உச்சம். அது அந்தப் பாத்திரத்தின் குணத்தை அப்படியே படம் பிடிக்கும்.
இதோ அந்த வசனம்:
“… ஒரு வேளை அவுங்களுக்கும் என்னைப்போல பெருவியாதியோ என்னமோ … யாரு கண்டா…” என்பார்!
அஃதாவது, அந்த மோகன் என்னும் கதாபாத்திரத்தின் கயமைக்கு அளவே கிடையாது. முடியாத அந்த நேரத்திலும் கிண்டலுக்கும் கேலிக்கும் ஒரு அளவு இருக்காது.
இந்த நாடக வசனத்திற்கும் அடுத்து வரும் குறளுக்கும் ஒரு தொடர்பு உள்ளது. நாளைத் தொடர்வோம்.
நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
コメント