20/01/2023 (687)
‘ஒறு’ என்றால் தண்டி, கடிந்து கொள் என்று பொருள். ஒருவர் நம்மை தக்க காரணம் இன்றி கடிந்து கொண்டால் அதைச் சற்று பொறுத்து போக வேண்டும் என்ற அறிவுறுத்துவார் நம் பேராசான்.
‘பொறை’ என்றால் என்னவென்று நாம் முன்பு ஒரு முறை சிந்தித்துள்ளோம். மீள்பார்வைக்காக காண்க 18/12/2022.
‘பொறை’ என்றால் பொறுத்துப் போதல்! பொறை என்றால் பாரம் தாங்கும் கல் என்றும் பொருள். அரசர்களை “பெரும்பொறை” என்றும் விளிக்கிறார்கள். மக்களின் பாரத்தை தாங்குவதால் அவன் பெரும்பொறை!
தனி மனித அறம் பற்றிச் சொல்லும் அதிகாரமாக பொறையுடைமை (16ஆவது) அதிகாரத்தை வைத்துள்ளார். அதிலே ஒரு பாடலில்:
தீங்கிற்கு மற்றொரு தீங்கு என்று பதில் அளிப்பவர்கள் ஒறுத்தார்; அவர்களுக்கும் முதலில் தீங்கிழைத்தவர்களுக்கும் என்ன வேறுபாடு? அவர்களை நல்லவர்கள் என்று ஆன்றோர்கள் எண்ணமாட்டார்கள். அதே சமயம், தமக்கு இழைக்கப்பட்ட தீங்கினைப் பொறுத்து, ஒறுத்தவர்களுக்கு உரிய வகையில் உணர்த்துபவர்களை இந்த உலகம் பொன் போல பாதுகாக்கும் என்கிறார். உரிய வகையானது அறிவின் வழி, அன்பின் வழி.
“ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து.” --- குறள் 155; அதிகாரம் பொறையுடைமை
ஒறுத்தாரை ஒன்றாக வையார் = பொறுமை இல்லாதவர்களை நல்லவர்களில் ஒருவராக வைக்கமாட்டார்கள்;
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து வைப்பர் = பொறுமை காத்து அன்பின்வழி நிற்பவர்களை இந்த அறிவுலகம் பொன்னைப் போல போற்றி பாதுகாக்கும்.
தனி மனிதனுக்கே இவ்வாறு என்றால் தலைமைக்கு? அங்கே அதிகாரங்கள் குவிக்கப்பட்டிருக்கும். அதிகார போதையில் வன்முறைகள் கையாளப்படும் என்பதைத் தெரிந்து அமைத்த அதிகாரம் தான் வெருவந்த செய்யாமை.
தவறுகளானாலும், தப்புகள் ஆனாலும் ஒரு தலைமை கண்ணை மூடிக்கொண்டு இருக்கவும் கூடாது; கடுமையாக நடக்கவும் கூடாது!
குற்றங்களுக்கு அதற்கேற்றார் போல விசாரித்து தண்டனைகளைத் தர வேண்டும்.
“தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.” --- குறள் 561; அதிகாரம் – வெருவந்த செய்யாமை
தக்காங்கு நாடி = தக்கவாறு ஆராய்ந்து; தலைச் செல்லா வண்ணத்தால் = மீண்டும் அதே குற்றங்களை அவர்கள் செய்யாவண்ணம்; ஒத்தாங்கு = தக்கவாறு; ஒறுப்பது வேந்து = தண்டனை தருவதுதான் நல்லத் தலைமை.
‘தலைச் செல்லா வண்ணத்தால்’ என்பதற்கு தலைமை தன் விருப்பத்திற்கு ஏற்றவாறு தண்டிக்காமல் என்றும் எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
நம்மாளு: அதாவது தலைமை over action பண்ணக்கூடாது!
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com )
Comments