13/08/2022 (532)
இன்னும் இரு தினங்களில் நமது இந்தியத் திருநாட்டின் எழுபத்தி ஐந்தாவது சுதந்திரத் தினத்தைக் கொண்டாட இருக்கிறோம்.
பல பெருமக்களின் போராட்டத்தால் மீண்டும் கிடைத்தது சுதந்திரம்
“தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சர்வேசா இப்பயிரை
கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ?
…
ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போல வந்த மாமணியைத் தோற்போமோ?
…
வான்மழை இல்லை என்றால் வாழ்வுண்டோ?
எந்தை சுயாதீனம் எமக்கில்லை என்றால் தீனர் எது செய்வோமோ?
…
நீயும் அறமும் நிலைத்திருத்தல் மெய்யானால்
ஓயும் முன்னர் எங்களுக்கு இவ் ஓர் வரம் நீ நல்குதியே.” --- மகாகவி பாரதியார்
சுதந்திரம் பெற்று விட்டோம், இனி ஒரு கவலையில்லை என்று சொல்ல இயலாது. இது ஒரு தொடர் போராட்டம்தான்.
தேசியக் கொடி என்பது நம் அனைவருக்குமானக் குறியீடு. நம் அனைவருக்கும் “மானக் குறியீடு”.
1929/1930 ல் நடந்த லாகூர் மாநாட்டில் முதன் முதலாக மூவர்ணக் கொடி வடிவமைக்கப்பட்டு ஏற்றப்பட்டது. அது ஒரு கட்சியின் கொடியாக இருந்ததனால், சுதந்திரம் பெறுவதற்கு சில தினங்களுக்கு முன் நமது முதல் குடியரசுத் தலைவராக இருந்த ராஜேந்திரப் பிரசாத் தலைமையில் கல்வித் தந்தை மௌலானா அபுல் கலாம் ஆசாத், கவிக்குயில் சரோஜினி நாயுடு, மூதறிஞர் ராஜாஜி, சட்ட நிபுனர் கே.எம், முன்ஷி மேலும் அண்னல் அம்பேத்கார் உள்ளடங்கிய ஒரு குழு நியமிக்கப்பட்டது. அந்தக் குழு பரிந்துரைத்தக் கொடிதான் நாம் இப்போது பயன்படுத்துவது.
இந்தக் கொடியை வடிவமைத்து. தன் கையாலேயே அதனை உருவாக்கி தந்தவர் ஒரு பெண்! முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த சுரையா தியாப்ஜீ. அந்தக் கொடிதான் நம் சுதந்திர இந்தியாவின் முதல் கொடி. அது தான் நம் முதல் பிரதமரால் ஏற்றப்பட்டது. அது கதரினால் நெய்யப்பட்டது.
நம் தேசியக் கொடியைக் குறித்த ஒரு வரைமுறை உருவாக்கப்பட்டது. அது Flag code of India (இந்தியக் கொடி வரைமுறை) என்று அழைக்கப் படுகிறது. முதலில் கதரில், கைத்தறியால் மட்டுமே நெய்ய வேண்டும் என்று இருந்தது.
பின்பு wool(கம்பளி), silkல் (பட்டு) இருக்கலாம் என்று 2002 ல் மாற்றம் பெற்றது, எனினும் கைத்தறியில் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று இருந்தது.
கடந்த ஆண்டு (December 2021), அது மேலும் மாற்றம் பெற்று, polyester என்னும் நெகிழியில் இருந்து தயாரிக்கப்படும் நூலில் இருந்தும் (Plastics fibre) தாயாரிக்கலாம், இயந்திரங்களின் மூலமும் தயாரிக்கலாம் என்று மாற்றம் பெற்றுள்ளது.
அனைவரும் கொடியை ஏற்றுவோம்.
மேலும் பல தகவலகளைச் சொன்னார் ஆசிரியர். நேரத்தின் அருமை கருதி சுருக்கி விட்டேன்.
குறளை நாளைத் தொடரலாம் என்றார் ஆசிரியர்.
வாழ்க நம் சுதந்திரம், வளர்க நம் சுதந்திரம்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன். உங்கள் அன்பு மதிவாணன்.
Comments