21/02/2022 (360)
நம்மாளு: வளையலுக்கு என்ன ஆச்சு?
ஆமாம், வளையலுக்கு என்ன ஆச்சு? அவள், தோழியிடம் சொல்கிறாள். உனக்குத் தெரியாது. இந்த வளையல்கள் இருக்கின்றதே, இப்போது தானாகவே கழல்கின்றன. இதிலிருந்து, எனக்குத் தெரிவது அவர் மீண்டும் பிரிவது உறுதி என்பதுதானே?
திருமணம் முடித்த உடனேயும் அவர் பிரிந்தது நான் அறிவேன்.
(கற்பியல் என்பது மணம் முடித்து அனைவரும் அறிய இல்வாழ்வைத் துவக்குவது. கற்பியலில் முதல் அதிகாரம் பிரிவாற்றாமை - 116 ஆவது அதிகாரம். முதல் அதிகாரத்திலேயே, உலக இயல்பு சொல்கிறார். மணம் முடித்தாலும், பொருளீட்டல் முதலான காரணங்களினால் ‘அவன்’ பிரிவான் என்பதை நம்பேராசான் தெளிவாக்குகிறார்.)
பிரிவு எப்படி ஏற்படும் என்பதைக் குறிக்க அவர் எடுத்துக் கொண்ட நிலப்பகுதி, நெய்தல் என்றே தோன்றுகிறது. ‘நெய்தல்’ என்றால் ‘கடலும் கடல் சார்ந்த நிலமும்’ என்பது நம் எல்லாருக்கும் தெரியும். அதே போன்று, அங்கிருக்கும் ஆடவர்களின் வாழ்க்கை கடல் மேல் பல நாட்கள் செல்வதும், வருவதுமாக இருக்கும். இதைச் சொன்னால், சுலபமாகப் புரியும் என்று நம் பேராசான் எடுத்துக்கொண்டது போல் உள்ளது.
‘துறைவன்’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். ‘துறை’ என்றால் ‘கரை’. அது மட்டுமல்ல ‘தண்ணம் துறைவன்’ என்கிறார். தண்ணம் என்றால் குளுமை. தண்ணம் துறைவன் என்றால் குளிர்ந்த நீரை உடைய துறையின் தலைவன். இன்றைக்கு, கொஞ்சம் நீள்கிறது. இன்னும் ஒரே ஒரு செய்தியை மட்டும் சொல்லிவிட்டு குறளுக்குள் நுழைவோம்.
செந்தமிழ் காவலர், பேராசிரியர் சி. இலக்குவனார் (1909 – 1973) என்பார் மாபெரும் தமிழறிஞர். அவர், ஆங்கிலேயர்களைக் குறிக்கும் ‘துரை’ என்ற சொல், அவர்கள் கடல் துறைகளின் மூலம் உள்ளே வந்ததாலும், அவர்கள் நாட்டை ஆள்பவர்கள் ஆனதாலும் அக்கால மக்கள் ‘துரை’ என அழைத்தனர் என்று குறிக்கிறார். இது நிற்க.
“தண்ணம் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை.” --- குறள் 1277; அதிகாரம் – குறிப்பு அறிவுறுத்தல்
தணந்தமை = பிரிவது; தண்ணம் துறைவன் தணந்தமை = குளிர்ந்த நீரை உடைய துறைகளின் தலைவன் பிரிவதை; முன்னம் உணர்ந்த வளை = முன் கூட்டியே இவ்வளையல்களுக்குத் தெரிகின்றன.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments