06/09/2023 (914)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
“...
பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும் சாமிக்கு நிகர் இல்லையா பிறர் தேவை அறிந்து கொண்டு வாரிக்கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா
உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
மாபெரும் சபையினில் நீ நடந்தால் - உனக்கு மாலைகள் விழவேண்டும் - ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும் ...” --- திரைப்படம் – வேட்டைக்காரன் (1964); கவியரசு கண்ணதாசன் வரிகளில், இசை வித்தகர் கி. வெ. மகாதேவன் (K V Mahadevan) அவர்களின் இசையில், தொ.மீ. சௌந்தரராஜன் (T M Soundararajan) அவர்களின் குரலில்.
மக்கட்பேறு என்னும் இந்த அதிகாரத்தின் முதல் குறளிலேயே அறிவறிந்த மக்கட் பேற்றினைத் தவிர ஒரு பேறு உண்டா என்று கேட்டார் நம் பேராசான். அது மட்டுமல்ல “பெறுமவற்றுள் யாமறிவது இல்லை” என்று நம் பேராசானே சொல்லிவிட்ட பிறகு யார்தாம் மறுத்திட இயலும்.
நமக்கு வாய்த்த மக்கள் நன் மக்களாக இருப்பின், மேலும், “பிறர் தேவை அறிந்து கொண்டு வாரிக்கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா?” என்று கவியரசு கண்ணதாசன் சொல்வது போல அமைந்துவிட்டால் அவர்களுக்கு நாம் நன்றி தெரிவிப்பது நமது கடமையும்கூட. நன்றி என்ற சொல்லுக்கு நன்மை என்ற பொருளும் உண்டு. அது மட்டுமல்ல அந்த நன்றியை நாம் எப்படித் தெரிவிக்க வேண்டும் என்பதனையும் நம் பேராசான் எடுத்துச் சொல்கிறார்.
அஃதாவது, தம் மக்களுக்கு பெற்றோர் செய்யும் நன்றி என்பது அவர்களை அவையில் முந்தி இருப்பச் செயல் என்கிறார். அப்படியென்றால் எல்லா இடங்களுக்கும் சென்று எதையாவது செய்து முதல் இடத்தை பிடித்துக் கொடுப்பதா? இப்படித்தான் பலரும் நினைத்துக் கொள்கிறார்கள். தங்கள் பிள்ளைகள் மற்றவர்களைவிட தனித்துவம் வாய்ந்தவர்கள், உயர்ந்தவர்கள் என்று காட்ட வாய்புகளை விலை கொடுத்து வாங்கிக் கொடுக்கிறார்கள். கொடுத்துக் கெடுக்கிறார்கள்!
எப்படி முந்தி இருப்பச் செய்வது என்பதற்கு பரிமேலழகப் பெருமான் சொல்வது என்னவென்றால் சிறந்த கல்வியுடையன் ஆக்குதல் என்கிறார். அறிவு அற்றம் காக்குங் கருவி என்பதை நினைவில் கொள்ள வேண்டும் (குறள் 421).
“தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்.” --- குறள் 67; அதிகாரம் – புதல்வரைப் பெறுதல்
தந்தை மகற்கு ஆற்றும் நன்றி = தந்தை தம் மகனுக்கு ஆற்றும் நன்மையாவது; அவையத்து முந்தி இருப்பச் செயல் = கற்றார் அவையின்கண் அவர்களுக்கு ஈடாக இணையாக மேலான கல்வியுடையன் ஆக்குதல்.
தந்தை தம் மகனுக்கு ஆற்றும் நன்மையாவது: கற்றார் அவையின்கண் அவர்களுக்கு ஈடாக இணையாக மேலான கல்வியுடையன் ஆக்குதல்.
சரி, இதற்கு அந்த மக்கள் அவர்களின் பெற்றோருக்கு என்ன பதில் உதவி செய்ய வேண்டும்? அதற்கும் அழகான, ஆழமானதொரு குறளைச் சொல்கிறார்.
“மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்லெனும் சொல்.” --- குறள் 70; அதிகாரம் – புதல்வரைப் பெறுதல்
தந்தைக்கு மகன் ஆற்றும் உதவி = பெற்றோர்களுக்கு அவர்களின் மக்கள் செய்ய வேண்டிய கைம்மாறு, அஃதாவது, உதவி என்னவென்றால்; இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல் = இம் மக்களின் பெற்றோர் என்ன தவம் செய்தனரோ, அஃதாவது, எப்படி அவர்கள் உறுதியுடன் இருந்து உயர்த்தினரோ என்று வியப்படைந்து கேட்கும் வகையில் ஊராரின் சொல் இருக்க வேண்டும்.
பெற்றோர்களுக்கு அவர்களின் மக்கள் செய்ய வேண்டிய கைம்மாறு, அஃதாவது, உதவி என்னவென்றால்: இம் மக்களின் பெற்றோர் என்ன தவம் செய்தனரோ, அஃதாவது, எப்படி அவர்கள் உறுதியுடன் இருந்து உயர்த்தினரோ என்று வியப்படைந்து கேட்கும் வகையில் ஊராரின் சொல் இருக்க வேண்டும்.
“மக்கள் சொல்” கேட்டல் செவிக்கு இன்பம் என்றார் (குறள் 65). அஃது, தம் ‘மக்களின் சொல்’ என்றும் தங்கள் ‘மக்களைப்பற்றிய பிறரின் சொல்’ என்றும் விரிந்து காதுக்கு தேனாக வந்து பாய்ந்து இன்பம் பயக்கும்.
பிறர் கூறும் சொல் எதுவாக இருக்க வேண்டும்? அதனை நாம் ஏற்கெனவே பார்த்துள்ளோம். நாளைத் தொடர்வோம்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments