13/12/2023 (1012)
அன்பிற்கினியவர்களுக்கு:
கொன்றால் பாவம்; தின்றால் தீரும் என்பதன் உண்மைப் பொருள் என்ன? விளக்குகிறார் தொல்காப்பியப் புலவர் வெற்றியழகனார்.
இந்தப் பழமொழி தவறாகவே பொருள் கொள்ளப் பெறுகிறது என்கிறார் உரைக்கும் பொருளும் உண்மைப் பொருள் என்ற நூலில்.
தமிழ் நிலத்தில் மாந்தர்கள் தொடக்கத்தில் விலங்கொடு விலங்காகக் குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்தார்கள். விலங்கினைக் கொன்றார்கள்; தின்றார்கள். முல்லை நிலத்திற்கு வந்தார்கள் காய் கனிகளைக் கண்டார்கள். அவற்றை உண்டார்கள். அவை இறைச்சியைவிட இனிமையாக இருப்பதை உணர்ந்தார்கள். மேலும் விலங்கினைக் கொல்ல தம் உயிரைப் பணயம் வைக்கத் தேவையில்லை என்பதனையும் உணர்ந்தார்கள். ஆடு, மாடு போன்ற சில விலங்குகளை வீட்டு விலங்குகளாக்கி நட்பு கொண்டார்கள். அதன் பயனாகக் கிடைக்கும் பால் போன்றவற்றை உணவாக்கிக் கொண்டார்கள். புலாலையே மறந்திருந்தார்கள்.
அப்போதுதான், மேலை நாட்டு நாகரீகக் கலப்பு ஏற்பட மீண்டும் இறைச்சிக்குத் திரும்பினார்கள். நன்றாக நெய்யை ஊற்றி, நெருப்பிலிட்டு வாட்டிச் சுவை மிகு துண்டங்களாக்கி இறைச்சியை உண்ணும் முறைமையைப் பழகினார்கள் என்கிறார் புலவர் வெற்றியழகனார்.
சரி, அந்தச் சொலவடைக்குப் பொருள் என்னவென்றால், கொன்றால் வரும் பாவத்தை அனுபவித்துத்தான் தீர்க்க வேண்டும் என்பது பொருள் என்கிறார். தின்றால் என்ற சொல்லுக்கு அனுபவித்தால் என்று பொருள் என்கிறார்.
மேலும் ஒரு வினாவினை எழுப்புகிறார். திருடிய பணத்தைச் செலவு செய்துவிட்டால் திருடிய தவறு தீர்ந்துவிடுமா? என்கிறார். சிந்திப்போம்.
சரி, நாம் குறளுக்கு வருவோம்.
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள். – 251; புலால் மறுத்தல்
தன் ஊன் பெருக்கத்திற்குத் தான் பிறிது ஊன் உண்பான் = தம்முடைய உடலைப் பெருக்கப் பிறிதோர் உயிரின் உடலைத் தின்பவன்; எங்ஙனம் ஆளும் அருள் = எவ்வாறு அருளினைக் கைகொள்வான்?
தம்முடைய உடலைப் பெருக்க பிறிதோர் உயிரின் உடலைத் தின்பவன் எவ்வாறு அருளினைக் கைகொள்வான்? இயலாது.
போற்றுவதுதாம் வளரும். இதுதான் இயற்கை விதி. பொருளைப் போற்றிப் பாதுகாத்தால் இல்லத்தில் இனிதே ஆட்சியை நடத்தலாம். உயிர்களைப் போற்றிப் பாதுகாத்தால் துறவறத்தில் அருள் ஆட்சியை நடத்தலாம்.
பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்றின் பவர்க்கு. – 252; புலால் மறுத்தல்
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை = இல்லறம் சிறக்கத் தாம் உருவாக்கும் பொருளினைப் போற்றிப் பாதுகாத்துத் தக்க வழிகளில் பயன்படுத்த வேண்டும். அவ்வாறு, போற்றாதவர்க்கு இல்லறத்தில் இனிய ஆட்சி இல்லை; ஊன் தின்பவர்க்கு அருளாட்சி ஆங்கு இல்லை = அதே போன்று, உயிர்களைக் கொன்று, அதனைத் தின்று, வாழ்பவர்க்குத் துறவறத்தின் அடிப்படையான அருள் ஆட்சி அங்கே இல்லை.
இல்லறம் சிறக்கத் தாம் உருவாக்கும் பொருளினைப் போற்றிப் பாதுகாத்துத் தக்க வழிகளில் பயன்படுத்த வேண்டும். அவ்வாறு, போற்றாதவர்க்கு இல்லறத்தில் இனிய ஆட்சி இல்லை. அதே போன்று, உயிர்களைக் கொன்று, அதனைத் தின்று, வாழ்பவர்க்குத் துறவறத்தின் அடிப்படையான அருள் ஆட்சி அங்கே இல்லை.
அஃதாவது, ஒரு நிலையைக் கடந்துவிட்டீர்களா, அடுத்த நிலைக்குச் செல்லுங்கள். விட்டக் குறை, தொட்டக் குறை என்று புலாலை மறுக்காமல் இருந்தால் மூப்பின்போது மூச்சு முட்டும். நம் பேராசான், யார் யாருக்கு எப்போது சொல்ல வேண்டுமோ அப்போது அதனை அழுத்தம் திருத்தமாகச் சொல்லுவார்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments