17/01/2024 (1047)
அன்பிற்கினியவர்களுக்கு:
என் உயிரே போனாலும் இந்தச் செயலைமட்டும் நான் செய்யமாட்டேன் என்போம் அல்லவா? அது போலச் சொல்கிறார்.
சான்றோர், தம் உயிரே போனாலும் பிற உயிர்களை நீக்கும் செயலைச் செய்யமாட்டார்களாம்.
தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை. – 327; - கொல்லாமை
தன் உயிர் நீப்பினும் = தன் உயிரே போகும் தருவாயிலும்; தான் பிறிது
இன் உயிர் நீக்கும் வினை செய்யற்க = தான் பிறிதோர் உயிரைக் கொல்லும் செயலைச் செய்யாது தவிர்க்க.
தன் உயிரே போகும் தருவாயிலும், தான் பிறிதோர் உயிரைக் கொல்லும் செயலைச் செய்யாது தவிர்க்க.
கோடி கோடியாக வரும் என்றாலும் அதைவிட ஓர் உயிரைக் கொல்லாமல் வரும் நன்மை எந்தக் காலத்திற்கும் எல்லாவற்றையும்விடப் பெரிதாகும்.
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை. – 328; - கொல்லாமை
நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும் = கொல்லுதலால் விளையும் நன்மை பெரிது என்றாலும்; சான்றோர்க்குக் கொன்று ஆகும் ஆக்கம் கடை = சான்றோர்களுக்கு அந்த நன்மைகள் இழிவானதே.
கொல்லுதலால் விளையும் நன்மை பெரிது என்றாலும் சான்றோர்களுக்கு அந்த நன்மைகள் இழிவானதே.
கொல்லாமை என்னும் பண்பு மிக முக்கியம். சிலர், என்ன செய்வார்கள் என்றால், ஒரு சிறு எறும்பு தன்மட்டில் எங்கோ ஊர்ந்து கொண்டிருக்கும். இவர்கள் அதைப் பார்த்துவிட்டால், பெரும் வீரர்கள் போலப் பாய்ந்து சென்று நசுக்குவார்கள்!
இந்த உதாரணத்தை நீங்கள் பலவற்றிற்குப் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம்.
பதிணென் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான சிறுபஞ்சமூலத்தில், காரியாசப் பெருமான், எவையெல்லாம் கொல்லாமையில் அடங்கும் என்று எடுத்துச் சொல்கிறார்.
பிறரின் வளர்ச்சி சார்ந்த விருப்பங்களைக் கொல்லக் கூடாது;
உறவினர்களுக்கு உணவைத் தடுத்தல் கூடாது;
ஒருவர் பிறர்க்குச் செய்யும் உதவியைத் தடுத்தல் கூடாது;
இவையெல்லாம் நன்கு உணர்ந்தவர்கள் எவ்வளவு பெரிய ஆதாயம் கிடைக்கும் என்றாலும் பிற உயிரைக் கொல்லமாட்டார்கள்.
நசைகொல்லார் நச்சியார்க் கென்றுங் கிளைஞர்
மிசைகொல்லார் வேளாண்மை கொல்லா – ரிசைகொல்லார்
பொன்பெறும்பூ ஞ்சுணங்கின் மென்முலையாய்! நன்குணர்ந்தார்
என்பெறினுங் கொல்லா ரியைந்து. – பாடல் 46; சிறுபஞ்சமூலம்
நச்சியார் = சார்ந்திருப்போர்; நசை = விருப்பம்; கிளைஞர் = உறவு; மிசை = உணவு; வேளாண்மை = ஈகை.
சான்றோர்க்குக் கொன்று ஆகும் ஆக்கம் கடை!
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments