28/08/2023 (906)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
இரண்டு பக்கமும் இடி என்பது போல பகை இருக்குமானால்? கேள்வி வரத்தானே செய்யுது? நமக்கு உதவுவதற்கோ ஒருவரும் இல்லை! இந்த இக்கட்டானச் சூழலில் என்ன செய்ய வேண்டும் என்று ஒருவர் நம் பேராசானைக் கேட்டுள்ளார் போலும்!
வள்ளுவப் பெருந்தகை அதற்கு இரண்டில் ஒரு பகையைத் துணையாக்கிக் கொள் என்கிறார். அதுவும் எப்படி? இன் துணையாக ஆக்கிக் கொள் என்கிறார்.
பகைக்கு மருந்து நட்புதான் என்பதில் ஐயமில்லை!
“தன்றுணை இன்றால் பகையிரண்டால் தானொருவன்
இன்றுணையாக் கொள்கவற்றின் ஒன்று.” --- குறள் 875; அதிகாரம் – பகைத்திறம் தெரிதல்.
தன்துணை இன்று = தனக்குத் துணையோ இல்லை; பகை இரண்டு = அழிக்க முயலும் பகையோ இரண்டு; ஒருவன் தான் அவற்றின் ஒன்று இன்துணையாக் கொள்க = அங்கனம் ஒருவன் சிக்கிக் கொண்டால் அந்தப் பகை இரண்டனுள் ஒன்றினை அப்போதைக்கு இன் துணையாக ஆக்கிக் கொள்க.
தனக்குத் துணையோ இல்லை. அழிக்க முயலும் பகையோ இரண்டு. அங்கனம் ஒருவன் சிக்கிக் கொண்டால் அந்தப் பகை இரண்டனுள் ஒன்றினை அப்போதைக்கு இன் துணையாக ஆக்கிக் கொள்க.
ஏற்கெனவே பகை மாட்சியில் ஒரே நேரத்தில் பல்லார் பகை கொள்பவன் பேதையிலும் பேதை என்றார் குறள் 873 இல். காண்க 26/08/2023 (904). மீள்பார்வைக்காக:
“ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.” --- குறள் 873; அதிகாரம் – பகைத்திறம் தெரிதல்
எனவே, பகையைப் பெருக்குவது கூடாது என்பது திண்ணம்.
ஆக அதிகமாக ஒரே ஒரு பகைதான் இருக்கலாம்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments