13/03/2024 (1103)
அன்பிற்கினியவர்களுக்கு:
ஓஒ, என் நெஞ்சத்தில் நீக்கமற நிறைந்திருப்பவர் அவரே. அதே போல நானும் அவர் நெஞ்சத்தில் நிறைந்து இருப்பேனா?என்ற ஐயத்தை எழுப்பினாள் குறள் 1204 இல்.
அவள்: வெட்கம் கெட்ட ஆளாக இருப்பாரோ?
தோழி: ஏன் அப்படி?
தம்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத் தோவா வரல். – 1205; - நினைந்தவர் புலம்பல்
ஓவா = ஒயாமல்; தம் நெஞ்சத்து எம்மைக் கடி கொண்டார் = அவரின் நெஞ்சத்தில் நான் நுழைவதைத் தடுத்துள்ளார்; எம் நெஞ்சத்து ஓவா வரல் = ஆனால், என் நெஞ்சத்தில் மட்டும் ஓயாமல் நுழைந்து என்னைப் பாடாய்படுத்துகிறார்; நாணார் கொல் = அதற்காக அவர் கொஞ்சமும் கூச்சப்படமாட்டாரா?
அவரின் நெஞ்சத்தில் நான் நுழைவதைத் தடுத்துள்ளார். ஆனால், என் நெஞ்சத்தில் மட்டும் ஓயாமல் நுழைந்து என்னைப் பாடாய்படுத்துகிறார். அதற்காக அவர் கொஞ்சமும் கூச்சப்படமாட்டாரா?
அதனால்தான் அவர் வெட்கம் கெட்ட ஆளாக இருப்பாரோ என்று ஓர் ஐயம்! என்றாள்.
தோழி: அப்படி உனக்குத் தோன்றினால், அவருக்கு உன் உள்ளத்தில் இடம் கொடுக்காதே. பழிக்குப் பழி. அது தான் சரி. என்ன சொல்கிறாய்?
அவள்: உனக்குத் தெரியாது அவர் எப்படி நுழைந்தார் என்று!
அவன்: … குமரிப் பெண்ணின் உள்ளத்திலே
குடியிருக்க நான் வரவேண்டும் …
அவள்: குமரி பெண்ணின் கைகளிலே
காதல் நெஞ்சைத் தரவேண்டும்
காதல் நெஞ்சை தந்து விட்டு
குடியிருக்க நீ வரவேண்டும் … கவிஞர் வாலி; எங்க வீட்டுப் பிள்ளை, 1965
இப்படிப் பாட்டுப் பாடியே அவர் நுழைந்தார். அவர் நெஞ்சத்தை என்னிடம் தந்துவிட்டு இப்போது என்னைப் பிரிந்து சென்றுள்ளார்.
நான் அவர் நெஞ்சத்தில் நுழைவதைக் குறித்து கேட்காமல் விட்டு விட்டோனோ?
ஆனால் ஒன்று மட்டும் சொல்வேன். அந்த இனிமையான நினைவுகளினால்தாம் உயிர் வாழ்கிறேன்.
மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்
உற்றநாள் உள்ள உளேன். – 1206; - நினைந்தவர் புலம்பல்
அவரொடு யான் உற்ற நாள் உள்ள உளேன் = அவரொடு நான் இணைந்து இருந்த அந்த இனிமையான நாள்களை நினைத்துப் பார்க்கிறேனோ உயிர் வாழ்கிறேனோ; மற்றி யான் என் உளேன் = இல்லையென்றால் நான் எப்படி உயிர் வாழ்வேன்; மன் – ஒழியிசை.
அவரொடு நான் இணைந்து இருந்த அந்த இனிமையான நாள்களை நினைத்துப் பார்க்கிறேனோ உயிர் வாழ்கிறேனோ! இல்லையென்றால் நான் எப்படி உயிர் வாழ்வேன்!
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
நாள்களை அல்லது நாட்களை - எது சரி?