11/09/2022 (560)
“உறுதோறு உயிர்தளிர்ப்ப…” அதாவது அவளைத் தழுவும் போதெல்லாம் எனது உயிர் தளிக்கிறது என்றவன் மேலும் தொடர்கிறான்.
காதல் எனும் களவு வாழ்க்கையில்தான் அவனது பயணம் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. கடப்பாடு ஏதுமில்லை. இருந்தாலும் ‘வருமுன் உரைப்பது’ என்பது நம் வள்ளுவப் பெருந்தகையின் முறையல்லவா? அந்தவகையிலே அமைந்த ஒரு குறள் இது. நாம் ஏற்கனவே வேறு வகையிலும் சிந்தித்தும் இருக்கிறோம். காண்க 15/04/2021 (88).
மகிழ்ச்சி இரண்டு வகையாக காட்டி இதுவும் அது போல என்கிறார்.
அதாவது, ஒருவன் அற வழியில் ஈட்டியப் பொருளைக் கொண்டு தனது சுற்றத்திற்கும், நட்பிற்கும் பகிர்ந்து கொடுத்து உண்பது என்பது ஒரு பெருமை மிக்க மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
அதைப்போல, தனது காதலியைத் தழுவதும் ஒரு மகிழ்ச்சியைக் கொடுக்குமாம்.
Nice ஆக (நைச்சியமாக), நம் பேராசான் சொல்கிறார்: தம்பி, இது போன்ற மகிழ்ச்சியை நீ வரும் காலங்களிலும் பெற, உழைத்து பல் உயிர்களையும் பாதுகாக்க வேண்டும் என்று அவரது எண்ணக் கிடக்கையை வெளிப்படுத்துகிறார். வள்ளுவப் பெருமானின் தலையணை மந்திரம் இது!
“தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால் அம்மா அரிவை முயக்கு.” --- குறள் 1107; அதிகாரம் - புணர்ச்சி மகிழ்தல்
தம்மில் இருந்து = தமது முயற்சியால்; தமதுபாத்து = தமது பங்கு, விருந்து; உண்டு = சுற்றம் உண்பதை கண்டு மகிழ்வது; அற்றால் = அத்தன்மையது; அம்மா அரிவை = அழகு மிக்க பெண்ணை; முயக்கு = தழுவுதல்
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
Комментарии