25/12/2022 (661)
எல்லா காரியங்களுக்கும், அதாவது செயல்களுக்கும் ஒரு காரணமாவது இருக்கும்.
நமக்கு அந்தக் காரணங்கள் சில சமயம் புரியாமல் இருக்கலாம். அல்லது, நாம் கற்பிக்கும் காரணங்கள் பொருந்தாமல் இருக்கலாம். அதனால், இது எப்படி நிகழ்ந்தது என்று குழம்பலாம்.
சில சமயம், காட்சிப் பிழைகளாலும், கருத்துப் பிழைகளாலும் காரியங்கள் நிகழலாம்.
தானே நிகழ்வது என்று ஒன்றும் இல்லை. காரியங்களுக்கு காரணம் உண்டு!
உடலிலே ஏதோ ஒரு குறைபாடு இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்தக் குறைபாட்டினால் ஒரு விளைவு ஏற்படுகிறது. உதாரணத்திற்கு கை வலியென்றால், அந்த வலியானது வந்ததற்கான காரணம் நீங்க மறுபடியும் கை சரியாகி நமக்கு ஒத்துழைக்கும்.
கைவலிக்கு நாம் தான் காரணம் என்றால், அதாவது, நமது அதிக உழைப்பாலோ, அல்லது தவறான பயன்பாட்டினாலோ என்றால் அதனை நிறுத்த கை நமக்கு மறுபடியும் ஒத்துழைக்கும்.
இது நிற்க.
தலைமையிடம் சில மாற்றங்களைக் காண்கிறார்கள். அது சுற்றியிருப்பவர்களை சங்கடத்தில் ஆழ்த்துகிறது என்றால் அவர்கள் அந்தத் தலைமையைவிட்டு ஒதுங்கி இருப்பார்கள்.
அதைக் கண்ட தலைமை அந்தக் காரணங்களை தவிர்த்துவிடுமாயின், மீண்டும் அவர்கள் நம்முடன் இணைவார்கள் என்கிறார் நம் பேராசான்.
அதாவது, சுற்றந்தழாலை விரும்பும் தலைமை எப்போதும் கவனமாக இருந்து சுற்றத்தைப் பேண வேண்டும்.
“தமர்ஆகித் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்.” --- குறள் 529; அதிகாரம் – சுற்றந்தழால்
தமர் = உற்றார், சுற்றத்தார், உயர்ந்தோர்; தமர் ஆகித் தற் துறந்தார் சுற்றம் அமராமை = நம்முடம் உறவாக இருந்தும் நம்மைவிட்டு நீங்கிய சுற்றம்;
காரணம் இன்றி வரும் = (நீங்கிப்போனதற்கான) காரணங்கள் நீங்க மீண்டும் அன்பினால் மீண்டும் இணைவார்கள்.
நம்முடம் உறவாக இருந்தும் நம்மைவிட்டு நீங்கிய சுற்றம்; நீங்கிப்போனதற்கான காரணங்கள் நீங்க அன்பினால் மீண்டும் இணைவார்கள்.
காரணங்களைக் கண்டறிந்தால் காரியங்கள் நிகழும்!
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
Karma Balan ...Causation theory cause and effect well explained.