10/09/2021 (199)
நேற்று நம்ம அண்ணன் கொஞ்சம் கள்ளப்பார்வைக்கே குஷியாயிருந்தார். இன்றைக்கு என்ன கதை வைத்திருக்காரோ தெரியலையேன்னு புலம்பிட்டே தம்பி வந்து சேர்ந்தான்.
என்ன தம்பி, உன்னைத்தான் எதிர்பார்த்துட்டே இருந்தேன். ஏன் தம்பி இவ்வளவு தாமதம்.
என்னையா எதிர்பார்த்துட்டு இருந்தீங்க? நம்பிட்டேன்.
அண்ணே, கடிகாரத்தை பாருங்க. இன்றைக்கு சீக்கிரமாகத்தான் வந்து இருக்கேன். சரி, இன்றைக்கு என்ன தகவல்?
ஓன்றுமில்லைடா, அவ என் மேல அன்பு வைச்சுருக்காடா! அதை நான் கண்டுபிடிச்சிட்டேன்.
பெரிய ஆளு அண்ணே நீங்க. சொல்லுங்க என்ன நடந்தது?
அவள் என்னை ஓரக்கண்ணாலே பார்த்தாள்.
ம்ம், அப்புறம்..
அவளை நான் பார்த்த உடனே அவளுக்கு வெட்கம் வந்துட்டுது. உடனே, தலை கவிழ்ந்தாள். அதிலிருந்து தெரியலையா அவ என்னை நெருங்கி வருகிறாள் என்று. அது தான் தம்பி, எங்க அன்புப் பயிருக்கு அவள் பாய்ச்சும் தண்ணீர்.
இது நிற்க.
அப்பாடா, இவ்வளவு பெரிய கதைக்கு நம்ம பேராசான் சுருக்கமாக போட்ட குறள் இதோ:
“நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.” --- குறள் 1093; அதிகாரம் – குறிப்பறிதல் (111)
நோக்கினாள் = பார்த்தாள்; நோக்கி = (நான் பார்த்ததைப்) பார்த்து; இறைஞ்சினாள் = தலை கவிழ்ந்தாள்; யாப்பினுள் = எங்களை இணைக்கும் அன்பெனும் பாத்தியுள்; அட்டிய = வார்த்த; நீர் = தண்ணீர்
அண்ணன் சும்மா மகிழ்ச்சியாக இருக்கட்டும். நீங்களும் ஜாலியா இருங்க. நாளை சந்திப்போம்.
நன்றிகளுடன், அன்பு மதிவாணன்
Comentários