23/08/2023 (901)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
பகைவர்களுக்கு கொண்டாட்டமாம்! எதனால் என்பதை பகை மாட்சி அதிகாரத்தில் குறள் 862 தொடங்கிச் சொல்லிக் கொண்டுவருகிறார். அந்த வகையில் குறள் 864 இல் இரண்டு குற்றங்களை, அஃதாவது, வெகுளி நீங்கான், நிறை இலன் என்று சொல்கிறார் என்றும் பார்த்தோம்.
அதை அப்படியே விட்டுவிட்டு “ நிறை எனப்படுவது மறைபிறர் அறியாமை” என்ற கலித்தொகைக்குள் சென்று விட்டோம். மீண்டும் குறளுக்குள் வருவோம்.
“நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது.” --- குறள் 864; அதிகாரம் – பகை மாட்சி
வெகுளி நீங்கான் = எப்போதும் கோபத்துடன் இருப்பவனை; நிறை இலன் = மறைக்க வேண்டியனவற்றை உளறிக்கொட்டுபவனை, காட்டிக் கொடுப்பவனை; எஞ்ஞான்றும் = எந்தக் காலத்திலும்; யாங்கணும் = எந்த இடத்திலும்; யார்க்கும் எளிது = யாராலும் வெல்வது எளிது.
எப்போதும் கோபத்துடன் இருப்பவனை, மறைக்க வேண்டியனவற்றை உளறிக்கொட்டுபவனை, காட்டிக் கொடுப்பவனை எந்தக் காலத்திலும் எந்த இடத்திலும் யாராலும் வெல்வது எளிது.
சினம் வந்தால் நம்மீது நாம் கொண்டுள்ள கட்டுப்பாடு காணாமல் போகும். வாயில் இருந்து வார்த்தைகள் தானாக வெளிவரும். இதைப் பேசலாமா, பேசக் கூடாதா என்பதெல்லாம் ஆங்கே கிடையாது. செய்கைகளும் அவ்வாறே! அவர்களை அந்த நொடியில் யார் வேண்டுமானாலும் வென்றுவிடலாம் என்பது நாம் அறிந்ததே.
“உசுப்பிவிட்டு உசுப்பிவிட்டே என்னை இந்த மாதிரித் தள்ளிட்டீங்களே” என்று நம்ம வைகைப்புயல் வடிவேலு அவர்களின் வசனத்தைப் பேச வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம்.
அடுத்துவரும் குறளில் மேலும் நான்கு குணங்களைச் சொல்கிறார். அந்தக் குணங்கள் ஒருவனிடம் இருந்தால் பகைவர்களுக்கு லட்டு சாப்பிட்டாற் போலவாம்!
அஃதாவது, எந்த வழியில் செல்வது என்பதை ஆராயாமல் செல்பவன், கிடைக்கும் வாய்ப்புகளைத் தவறவிடுபவன், இதைச் செய்தால் எந்நாளைக்கும் பழி வருமே என்று எண்ணாதவன், பண்பில்லாதவன் முதலிய குணங்கள் ஒருவனுக்கு இருந்தால் அவை பகைவர்களுக்கு இனிதாக அமையுமாம்.
“வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க் கினிது.” --- குறள் 865; அதிகாரம் – பகை மாட்சி
வழிநோக்கான் = செல்லும் வழியை ஆராய மாட்டான்; வாய்ப்பன செய்யான் = கிடைக்கும் வாய்ப்புகளைத் தவற விடுவான்; பழி நோக்கான் = பழி வருமே என்று எண்ணமாட்டான்; பண்பிலன் = பண்பில்லாதவன்; பற்றார்க்கு = பகைவர்க்கு; இனிது = இனிமையானவன்.
'பண்பு' எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்” என்றார் நல்லுந்துவனார் பெருமான் கலித்தொகையில். அஃதாவது, பண்பு என்பது பெருமைத் தரத்தக்கது எது என அறிந்து அதன்படி நடத்தல்.
செல்லும் வழியை ஆராய மாட்டான்; கிடைக்கும் வாய்ப்புகளைத் தவற விடுவான்; பழி வருமே என்று எண்ணமாட்டான்; பண்பில்லாதவன்; பகைவர்களுக்கு இனிமையானவன்.
இந்த நிரல் (வரிசை, List) நீண்டுகொண்டே செல்கின்றது. நாமும் தொடர்வோம்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments