01/10/2022 (580)
அவள்: அவர் எப்போதும் என் நெஞ்சத்திலும், கண்களிலும் நிறைந்திருக்கிறார். அதனால், என்னால் சூடான உணவுகளை சாப்பிடவும் முடியவில்லை. கண்களை மூடி ஓய்வு எடுக்கவும் முடியவில்லை. அந்தக் கண்களுக்கு மையிட்டு அழகு படுத்தும் கண நேரம் அவர் மறைந்துவிடுவாரோ என்று நான் மையிடுவதும் இல்லை.
தோழி: ம்ம்…
அவள்: ஆனால், இதை சரியாக புரிந்து கொள்ளாமல் இந்த ஊர் அவர் என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார் என்று அவரைத் தூற்றுகின்றது. என்னால் சரியாக உறங்கமுடியவில்லை, உண்ண முடியவில்லை என்றும் என் கண்களில் இருந்த ஒளி மங்கிப் போய்விட்டது என்றும், எனக்கு ஏதோ ஆகி விட்டது என்றும் இந்த ஊர் பழிக்கின்றது.
தோழி: சரி, சரி. எனக்குப் புரியுது. என்னைத் திட்ட நீ ஊரை இழுப்பதுபோல இருக்கிறது உன் பேச்சு. நான் இனி எதுவும் சொல்லலைம்மா. நீயாச்சு, அவராச்சு. ஏதோ, ஒழுங்கா ஒய்வெடுத்து அவர் வரும்வரை அழகையும் உடம்பையும் காப்பாத்திக்கோ என்று சொன்னால் ‘ஊரை’க் காண்பித்து என்னை வைவாயோ?
இது நிற்க. நாம் அந்தக் குறள்களுக்கு வருவோம்.
‘வெய்துண்டல்’ என்றால் சூடான உணவுகளை சுகமாக சாப்பிடுவது. ‘வேபாக்கு’ என்றால் வேகுதல், வெந்து போதல்.
அதாவது, அவன் நெஞ்சத்துள் இருப்பதால் அவளால் சூடான உணவுகளையும் சாப்பிடமுடியவில்லையாம்!
“நெஞ்சத்தார் காதலவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து.” --- குறள் 1128; அதிகாரம் – காதல் சிறப்பு உரைத்தல்
சூடான உணவில் சுவை இருப்பது எனக்கும் தெரியும். என்னவர் என் உள்ளில் இருப்பதால், என்னால் சூடாக எதையும் சாப்பிட முடியாது.
காதலவர் நெஞ்சத்தாராக = என்னவர் என் உள்ளில் இருப்பதால்; வேபாக்கு அறிந்து வெய்துண்டல் அஞ்சுதும் = அவருக்கு அந்த சூடான உணவு வகைகள் வருத்தம் தருமோ என்று அஞ்சி நான் உண்ணாமல் இருக்கிறேன்.
“இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும் இவ்ஊர்.” --- குறள் 1129; அதிகாரம் – காதல் சிறப்பு உரைத்தல்
இமைத்தால் அவர் மறைந்து போவது எனக்கு மட்டும்தான் தெரியும். அவர் எப்போதும் என்னுடன்தான் இருக்கிறார். அது புரியாமல், இந்த ஊர் அவருக்கு என்மேல் அன்பு இல்லை என்று தூற்றுகின்றது. (தோழியின் செய்கையை ஊரின் மேல் ஏற்றிச் சொன்னது)
இமைப்பின் கரப்பாக்கு அறிவல் = இமைத்தால் அவர் மறைந்து போவது எனக்கு மட்டும்தான் தெரியும்;
அனைத்திற்கே ஏதிலர் என்னும் இவ்ஊர் = அது புரியாமல், இந்த ஊர் அவருக்கு என்மேல் அன்பு இல்லை என்று தூற்றுகின்றது.
மேலும் அவளின் ஏச்சு தொடரும். நாளை பார்க்கலாம்.
நன்றி.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments