05/10/2022 (583)
அவன்: முன்பெல்லாம் முறுக்கேறி மன உறுதியோடு இருந்தேன். அது போல் மடலேறுதல் போன்றவற்றை வெட்கத்தைவிட்டு செய்யவேண்டும் என்று கணவிலும் நினைத்ததில்லை.
ஆனால், இன்றோ, அவளை அடைய வேண்டும் என்ற வேட்கையினால் எல்லாம் மாறிவிட்டது.
“நாணோடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.” --- குறள் 1133; அதிகாரம் – நாணுத் துறவு உரைத்தல்
நாணத்தோடு உறுதி இருந்தது அந்தக் காலம். ஆனால் இன்று, காதலில் வீழ்ந்தவர்களின் கடைசி ஆயுதமாக இருக்கும் மடல் ஏறும் மனப்போக்கு என்னுள்ளும் வந்துவிட்டது.
பண்டு = பழையது, அந்தக் காலம்; நாணோடு நல்லாண்மை பண்டுடையேன் = நாணத்தோடு உறுதி இருந்தது அந்தக் காலம்;
காமுற்றார் ஏறும் மடல் இன்றுடையேன் = காதலில் வீழ்ந்தவர்களின் கடைசி ஆயுதமாக இருக்கும் மடல் ஏறும் மனப்போக்கு என்னுள்ளும் இன்று வந்துவிட்டது.
எகிப்தியர்கள் கி.மு. 2000 ஆண்டுகளில் ‘பண்ட்’ (Land of Punt) என்ற நாட்டோடு வணிகத் தொடர்பில் இருந்தார்கள் என்றும் அந்த ‘பண்ட்’ நாட்டில் ‘ஓவிர்’ என்ற துறைமுகம் இருந்ததாகவும் குறிப்புகள் கிடைகின்றன. அந்த ‘பண்ட்’ நாட்டில் கிடைத்த தேக்கு, பொன் ஆபரணங்கள் மற்றும் வாசனைப் பொருட்களுக்காக (spices) அந்த நாட்டுடன் வணிகத்தொடர்பில் இருந்தார்கள் என்ற குறிப்புகள் இருக்கின்றன. அந்த நாடு எங்கு இருக்கின்றது என்று தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.
சரி, இந்தக் கதை இப்போது எதற்கு என்று கேள்வி வரலாம். தமிழறிஞர்கள் கூறுவது என்னவென்றால் அந்த ‘பண்ட்’ நாடு என்பது ‘பாண்டி நாடு’ என்றும், ‘ஓவிர்’ துறைமுகம் என்பது ‘உவரி’ என்ற தென்பாண்டித் துறைமுகம் என்றும் குறிக்கின்றனர்.
‘பண்ட்’ என்ற சொல் பழைமையான என்ற வகையிலே பழைமையான நாடு என்று எகிப்தியர்கள் அழைத்திருக்கலாம் என்றும் தோன்றுகிறது.
தோண்டிப் பார்த்தால்தான் தெரியும்!
நன்றி. மீண்டும் சந்திப்போம்.
உங்கள் அன்பு மதிவாணன்
Bình luận