06/04/2023 (763)
உணர்வா அல்லது அறிவா என்ற கேள்விக்கு உணர்வு மேலோங்கும் போது அறிவு விடை பெற்றுக்கொள்ளும் என்று பார்த்தோம்.
அதனால்தான், ஊழ் என்ற அதிகாரத்தில் ஒரு குறளை வைத்தார் நம் பேராசான். அதை நாம் ஏற்கனவேப் பார்த்துள்ளோம். மீள்பார்வைக்காக காண்க 11/02/2021 (25).
“நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும்.” ---குறள் 373; அதிகாரம் – ஊழ்
நுண்ணிய நூல்பல கற்பினும் = என்னதான் பல நுட்பமான நூல்களைக் கற்றாலும்;
மற்றும்தன் உண்மை அறிவே மிகும் = (சில சமயம்) அந்த நூல்களையெல்லாம் கற்பதற்குமுன் அவனுக்கு என்ன அறிவு இருந்ததோ அதுதான் வெளிப்படும்.
சில சமயம், என்னதான் பல நுட்பமான நூல்களைக் கற்றாலும், அந்த நூல்களையெல்லாம் கற்பதற்குமுன் அவனுக்கு என்ன அறிவு இருந்ததோ அதுதான் வெளிப்படும்.
என்ன அறிவு இருந்திருக்கும்? பேதைமைதான் இருந்திருக்கும்!
அந்த ‘சில சமயம்’ ஏன் கற்ற அறிவு கை கொடுக்காது?
அது உணர்வு மிகுதியால்தான்!
இந்தக் கேள்விக்குத்தான் சீவக சிந்தாமணியிலிருந்து அந்த உதாரணத்தைக் காட்டுகிறார் பரிமேலழகப் பெருமான். காண்க 04/04/2023
“காதன் மிக்குழிக் கற்றவுங் கைகொடா ...” பாடல் 1632
காதன் மிக்கூழி = காதல் மிக அதிகமாகும்போது
அதிகமானக் காதல் = மோகம், காமம்
இதைத்தான் ‘விதி’ என்றும் ‘ஊழ்’ என்றும் சொல்கிறார்கள்.
அதாவது விதி விலக்காக இருக்கவேண்டியது, பெரும்பாலானச் சமயங்களில் நிகழ்வதால் அதுவே விதியாகி விட்டது!
சிலர் மட்டும் வெற்றிகளைக் குவிப்பதற்கும், பலர் ஒன்றும் இல்லாமல் தவிப்பதற்கும் இதுவே காரணம். சிந்திப்போம்!
ஏன் ‘அது’ பெரும்பாலானச் சமயங்களில், பெரும்பாலானவர்களுக்கு நிகழ்கிறது?
மனம் ஒரு நிலையில் இல்லாத காரணத்தால்! இதுதான் உலகத்து இயற்கை!
இந்த இயற்கையைத் தெரிந்து நடக்கனுமாம் அமைச்சன்!
எப்படி? விட்ட இடத்திற்கு வந்துவிட்டேனா?
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள் முதலான: www.easythirukkural.com)
Comments