31/10/2021 (250)
குறிப்பு அறிதல் (71வது) அதிகாரத்தின் கடைசிக் குறள், முடிவுரையாகச் சொல்லப் போகிறார்.
குறிப்பறிதலின் சிறப்புகளையும், இழப்புகளையும் விளக்கி, அதைத் தொடர்ந்து, குறிப்பறியும் பொது கருவி (macroscopic tool) முகம் (புறத் தோற்றம்) என்பதனையும், மேலும் நுண்கருவி (microscopic tool) நோக்கு என்பதனையும் குறிப்பால், வெகு அழகாக அடுக்கிக் கொண்டே வந்தார். இப்போது இறுதியாக அறுதியிட்டுச் சொல்லப் போகிறார்.
வாங்க. கொஞ்சம் வெளியே போயிட்டு வந்துருவோம்.
‘Bio’ என்றால் உயிர் என்கிறார்கள். ‘-logy’ என்ற விகுதி ஒரு இயலை, ஒரு தனிப் பகுதியைக் குறிக்கும். ‘Biology’ என்றால் உயிரியல். ‘Micro’ என்றால் நுண் அல்லது மிகச் சிறிய என்று பொருள். ‘Microbiology’ என்றால் நுண்ணியம் என்று சொல்கிறார்கள். அதாவது உயிர்களின் செயல்பாடுகளை கூர்ந்து ஆழமாக உள்ளே சென்று ஆராயும் ஒரு தனி அறிவியல் பிரிவு. ‘நுண்ணியம்’ - இந்த சொல்லை கவனம் வைத்துக் கொள்ளுங்கள்.
Microbiologyஐ நுண்ணியம் என்று எவ்வளவு கஷ்டப்பட்டு மொழி பெயர்த்துள்ளோம்!
சரி, அந்த நுண்ணிய அறிஞர்கள் என்ன பண்றாங்க? பார்க்கறாங்க! எப்படி பார்க்கிறார்கள். நுண்கருவிகள் கொண்டு பார்க்கிறார்கள்.
பார்த்தா தெரியுமா? அவர்களுக்குத் தெரியும்.
நமக்கும் கண் இருக்கு. மைக்கிராஸ்கோப்பில் (microscopeல்) தான் பார்க்கிறோம். ஏன், நமக்குத் தெரியாதா? தெரியும். ஆனால் புரியுமா?
அதான் சூட்சுமம். அவர்கள் அந்த நோக்கை கற்று, பயின்று இருக்கிறார்கள்.
கருவிகளை பிடித்துக் கொண்டு தொங்கக்கூடாது. அதன் பின் இருக்கும் அந்த நோக்குதான் ரொம்ப முக்கியம்.
சரி, நாம இப்போ குறளுக்கு வருவோம்.
“நுண்ணியம் என்பார் அளக்கும்கோல் காணுங்கால்
கண் அல்லது இல்லை பிற.” --- குறள் 710; அதிகாரம் – குறிப்பறிதல்
நுண்ணியம் என்பார் = நுட்பமான அறிவை உடையவர்கள்ன்னு சொல்பவர்கள்;அளக்கும்கோல் காணுங்கால் = அவர்கள் பயன்படுத்தும் கருவி எது என்று பார்த்தால்; கண் அல்லது இல்லை பிற = அது அந்த நோக்கு தான் வேற ஏதுமில்லை. கண் இங்கும் ஆகு பெயர்.
பார்த்தீங்களா? நுண்ணியத்தை எப்படி பிடித்து இருக்கார் நம் பேராசான்!
திருக்குறளை படிக்க, படிக்க ஆச்சரியமாகத்தான் இருக்கு எனக்கு.
உங்களுக்கு எப்படி? கொஞ்சம் உங்கள் கருத்தை சொல்லுங்க ப்ளீஸ்.
இன்றைக்கு, நம்ம தொடர் 250வது பகுதியை எட்டி இருக்கிறது! மிக்க மகிழ்ச்சி.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
コメント