28/05/2024 (1179)
அன்பிற்கினியவர்களுக்கு:
நாமும் பழிக்கு ஆட்பட்டுவிடக் கூடாது. நம்மைச் சார்ந்தவர்களையும் பழிக்கு பலியாகவிடக் கூடாது. எப்போதும் அந்த எச்சரிக்கை வேலியின் உள்ளேயே நம் பயணம் இருக்க வேண்டும் என்கிறார்.
நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர். – 1016; - நாணுடைமை
மேலாயவர் = குணங்களால் மேலானவர்கள்; வியன் = விரிந்த, அகன்ற;
நாண் வேலி கொள்ளாது = நாணுடைமை என்னும் வேலியின் பாதுகாப்பு இல்லாமல்; வியன் ஞாலம் பேணலர் = இந்தப் பரந்து விரிந்து இருக்கும் உலகத்தில் தம் பயணத்தைத் தொடர விரும்பமாட்டார்.
குணங்களால் மேலானவர்கள், நாணுடைமை என்னும் வேலியின் பாதுகாப்பு இல்லாமல், இந்தப் பரந்து விரிந்து இருக்கும் உலகத்தில் தம் பயணத்தைத் தொடர விரும்பமாட்டார்.
வேலியைத் தாண்டினால் உயிர் பிழைக்கலாம் என்றாலும் உயிர் போனால் போகட்டும் என்று அந்த நாணுடைமை என்னும் வேலியைத் தாண்டமாட்டார்களாம் சொல்கிறார் நம் பேராசான்.
அஃதாவது, நாணுடைமை என்பது உயிரினும் மேலானது.
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர். – 1017; - நாணுடைமை
நாண் ஆள்பவர் = நாணுடைமையை நெஞ்சுக்கு நெருக்கமாக வைத்திருப்பவர்கள்; நாணால் உயிரைத் துறப்பர் = பழிக்கு அஞ்சி உயிரையும் துறப்பாரே தவிர; உயிர் பொருட்டால் நாண் துறவார் = பழியைத் தரும் செயல்களைச் செய்தால்தான் உயிர் பிழைக்கலாம் என்றாலும் நாணுடைமையைக் கைவிடார்.
நாணுடைமையை நெஞ்சுக்கு நெருக்கமாக வைத்திருப்பவர்கள், பழிக்கு அஞ்சி உயிரையும் துறப்பாரே தவிர, பழியைத் தரும் செயல்களைச் செய்தால்தான் உயிர் பிழைக்கலாம் என்றாலும் நாணுடைமையைக் கைவிடார்.
செய்வது என்றாலே அது அறமாக, நல்வினையாக இருக்க வேண்டும், ஒழிக்கவேண்டியது எது என்று கேட்டால் பழியைத் தரும் தீவினைகளே.
பழிக்கு அஞ்சுதல் தலை நிமிர்ந்து வாழ வழி என்றார் குறள் 40 இல். காண்க 22/02/2021. மீள்பார்வைக்காக:
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி. – 40; அறன் வலியுறுத்தல்
நம்மாளு: சரி ஐயா. பழி தரும் செயல்களின் மூலக் காரணம் அல்லது காரணிகள் யாவை?
ஆசிரியர்: திருக்குறள் முழுமையுமே பழியைத் தவிர்க்க நம் பேராசான் காட்டிய வழிதான் என்றால் மிகையாகாது. எனவேதான் இந்நூல் ஓர் வாழ்வியல் நூல்.
அறன் வலியுறுத்தலில் அனைத்தையும் சுருக்கமாகச் சொல்லியிருப்பார். அதில் உள்ள குறள்களைப் பல அதிகாரங்களாகப் பின்னர் விரித்து விரித்துத் திருக்குறளை யாத்திருப்பார்.
முதலில் மனம். மனத்தை மாசு இல்லாமல் வைத்துக் கொள்ள வேண்டும். காண்க 15/02/2021. மீள்பார்வைக்காக:
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற. – 34; - அறன் வலியுறுத்தல்
அதனைத் தொடர்ந்து மனக் குற்றங்களை வகைப்படுத்தினார். காண்க 20/02/2021. மீள்பார்வைக்காக:
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். – 35; அறன் வலியுறுத்தல்
இப்படி, ஒரு குழந்தைக்குச் சொல்வதனைப் போன்று மெல்ல மெல்ல ஒவ்வொன்றையும் விரித்துக் கொண்டே போவது நம் பேராசானின் முறைமை. முதலில் சொல்லை அறிமுகப்படுத்துவார். அந்தச் சொல்லின் பொருளைச் சொல்லுவார்; அந்தச் சொல்லை நேர் முகமாகவும் எதிர்மறையாகவும் விரிப்பார்.
திருக்குறளின் தனித் தன்மையைச் சொல்லிக் கொண்டே போகலாம். உங்கள் கேள்விகள் அனைத்திற்கும் பதில் இருக்கும் நம் பேராசானிடம்.
மனத்துக்கண் மாசிலன் ஆவது எப்படி என்றால் மனம் மாறுபடமால் இருப்பது என்பார். அதனை இகல் என்னும் அதிகாரத்தில் விரிப்பார்.
மனம் கெடும்போது அன்பு மறையும்; பகை தோன்றும்; பகை தோன்றிவிட்டால் அஃது பாவம் செய்யத் தூண்டும்; பாவத்தைச் செய்துவிட்டால் எங்கே மாட்டிக் கொள்ளப் போகிறோமோ என்ற அச்சம் வந்து ஆட்டும்; அந்த அச்சம் மேலும் பல கீழானச் செயல்களைச் செய்யத் தூண்டும். அவ்வளவுதான், நீங்காப் பழிக்கு அவை நம்மை ஆளாக்கும்.
இந்த முறைமையைப் பிறனில் விழையாமையில் விளக்கியிருப்பார். காண்க 18/06/2021. மீள்பார்வைக்காக:
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்இறப்பான் கண். - 146; – பிறனில் விழையாமை
திருக்குறளை மீள்பார்வை செய்வதுதான் அனைத்திற்கும் திறவு கோல்.
நம்மாளு: ஐயா, பழி வராமல் இருக்க எளிமையான வழியைச் சொல்ல முடியுமா? அவற்றைக் கையாள்வது எப்படி?
ஆசிரியர்: ம்ம்… மீள்பார்வை செய்வது கடினம் என்று சொல்கிறீர்கள். பழியைத் தவிர்க்க எளிதான வழியைச் சொல்லுங்கள் என்கிறீர்கள்.
எளிதான வழி, வாழ்க்கையைத் திறந்த புத்தகமாக வைத்துக் கொண்டால் (transparency) பழி வருவதனைத் தடுத்துக் கொள்ளலாம்.
நாம் தனிமையில் இருக்கும்போது என்ன செய்கிறோமோ அதுதான் நாம் என்று உணர வேண்டும்.
“பெண்டாட்டி ஊருக்குப் போயிட்டா…” தருணங்களைத் தவிர்க்க வேண்டும்.
பெண்டாட்டி என்பது ஒரு குறியீடு.
யாரும் பார்க்கவில்லை என்று எண்ணி நாம் எந்தச்செயலைச் செய்கிறோமோ அந்தச்செயலே நம் உயரத்தின் அளவுகோல் என்றார் என் ஆசிரியர்.
நம்மாளு: (மனசுக்குள்ளே) என்ன செய்ய? பின்னாடி திரும்பிப் பார்த்தால்… வேண்டாம் அந்த விபரீத விளையாட்டு. இனிமேலாவது கவனமாக இருக்கணும்.
என்ன சிந்தனை? போனது போகட்டும். இனி வரும் காலத்தை இனிமையாக ஆக்கிக் கொள்வோம் என்றார் ஆசிரியர்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments