13/04/2024 (1134)
அன்பிற்கினியவர்களுக்கு:
கொழுப்பு இருக்கே, கொழுப்பு அதைப் போட்டுக் காய்ச்சினால் காணமல் போகும்.
ஆமாங்க, கொழுப்பைத் தீயில் இட்டால் அது எண்ணெய்யாக உருகிவிடும். கொழுப்பைத் தமிழில் “நிணம்” என்று வழங்குகிறார்கள்.
நிறை என்றாலும் ஒருவிதக் கொழுப்புதான்! “நான் யாரு, எவ்வளவு பெரிய ஆளு?” என்ற கொழுப்பு. இந்தக் கொழுப்பு அன்புடையவர்களிடம் பலிக்காது. நாம் நம் குழந்தைகளிடமோ, நாம் விரும்புபவர்களிடமோ அந்தக் கொழுப்பைக் காட்டுவது கிடையாது. அவர்களைப் பார்த்த உடன் அந்தக் கொழுப்பு உருகிவிடுகிறது.
அப்படி இருக்கும்போது காதல் கணவனிடம் அந்த நிறை என்னும் நிணம் நிற்கும் என்றா நினைக்கிறீர்கள்? என் கொழுப்பெல்லாம் நெய்யாக உருகுகிறதே என்கிறாள்.
அதை அப்படியே பாடலில் வடிக்கிறாள், நம் பேராசானின் சொல் வண்ணத்தால்…
நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல். – 1260; - நிறை அழிதல்
நிணம் தீயில் இட்டு அன்ன = கொழுப்பினைத் தீயில் இட்டால் அது உடனே உருகுவது போல; நெஞ்சினார்க்கு புணர்ந்து ஊடி நிற்பேம் எனல் உண்டோ = அன்பு கொண்ட நெஞ்சங்களுக்கிடையே சண்டை போட்டுக் கொண்டு பிரிந்தேதான் இருப்போம் என்பது இருக்குமோ? அது நடக்கவே நடக்காது!
கொழுப்பினைத் தீயில் இட்டால் அது உடனே உருகுவது போல அன்பு கொண்ட நெஞ்சங்களுக்கிடையே சண்டை போட்டுக் கொண்டு பிரிந்தேதான் இருப்போம் என்பது இருக்குமோ? அது நடக்கவே நடக்காது!
கல்லைக் கொண்டு கல்லை அடித்தால் இரண்டுமே சிதையும். இப்படி இருப்பவர்களைக் கல் நெஞ்சக்கார்கள் என்கிறோம். கல்லை உளி கொண்டு திருத்தலாம். திருத்துவதற்குச் சிற்பியாக வேண்டும்! சிற்பியாக இருப்பதற்குப் பொறுமை வேண்டும். – முனைவர் த.ம. (வேற யாருமில்லை நானேதான்! அனுபவம் பேசும்..)
நீரடித்து நீர் விலகாது … நிரைப் போல இருப்போம்!
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.
Comments