19/06/2024 (1201)
அன்பிற்கினியவர்களுக்கு:
மலரைவிட மென்மையானது காமம். அதனை அறிந்து நுகரத் தலைப்படுபவர்கள் வெகு சிலரே! என்று நம் பேராசான் சொல்லியிருப்பது நமக்குத் தெரியும். காண்க 04/03/2022. மீள்பார்வைக்காக: வாழ்வியலும் அவ்வாறுதானே உள்ளது.
மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார். - 1289; - புணர்ச்சி விதும்பல்
வெகு சிலருக்குத்தான் காமத்தின் அருமை புரியும். காலச் சக்கரத்தின் சுழற்சியில் என்ன செய்கிறோம் என்று தெரியாமலே ஓடிக் கொண்டிருப்பவர்கள்தாம் ஏராளம்.
அன்பு என்பதே கூடி முயங்குவதுதான். ஒரு கை மட்டும் தட்டினால் ஓசை வருமா என்ன? இருப்பினும் நம்பிக்கையோடு தட்டுங்கள். ஒரு நாள் மனக் கதவு திறக்கும்.
உலக வழக்கைச் சுட்டிக் காட்ட நம் பேராசான், ஊடல் யாரிடம் இனிக்கும் என்பதனைச் சொன்னார். அஃதாவது, அவ்வாறு இருங்கள் என்றார். காண்க 08/05/2022. மீள்பார்வைக்காக:
நீரும் நிழல தினிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது. - 1309; - புலவி
நீரானது நிழலில் இருந்தால்தான் இனிமை; அதுபோல, ஊடலும் அன்பில் கட்டுண்டவர்களிடமே இனிமை பெறும்.
மெல்லிய காம நுகர்ச்சியை அறியாதவர்களிடம் ஊடிதான் என்ன பயன் என்று இடித்துரைக்கிறார்.
நோதல் எவன் மற்று நொந்தார் அஃதறியும்
காதலர் இல்லா வழி. – 1308; - புலவி
நொந்தார் = நம் செயலால் இவர் நொந்து போயுள்ளார்; அஃதறியும் காதலர் இல்லா வழி = என்ற புரிதலை உடைய காதலர் இல்லாவிட்டால்; நோதல் எவன் = ஊடிதான் என்ன பயன்?
மற்று வினை மாற்று.
நம் செயலால் இவர் நொந்து போயுள்ளார் என்ற புரிதலை உடைய காதலர் இல்லாவிட்டால் ஊடிதான் என்ன பயன்?
இந்தக் குறளைப் பொதுப்படக் கூறினார்.
இருந்தாலும், இன்றாவது கல்லுக்குள் ஈரம் துளிர்க்காதா என்று ஏங்குதே என் நெஞ்சம்!
ஊடல் உணங்க விடுவாரோடு என்னெஞ்சம்
கூடுவோம் என்பது அவா. – 1310; - புலவி
உணங்குதல் = காய்தல், வாடுதல், மெலிதல், சுருங்குதல்;
ஊடல் உணங்க விடுவாரோடு = தாம் கொண்டுள்ள ஊடலை ஒரு பொருட்டாக எண்ணாமல் “அப்படியே இருக்கட்டும் பார்த்துக்கலாம்” என்று அவமரியாதை செய்வாரோடு; என் நெஞ்சம் கூடுவோம் என்பது அவா = என் நெஞ்சம் உறவாட விழைவதை என்னவென்று சொல்வேன். பேராசை என்றுதான் சொல்ல வேண்டும்.
தாம் கொண்டுள்ள ஊடலை ஒரு பொருட்டாக எண்ணாமல் “அப்படியே இருக்கட்டும் பார்த்துக்கலாம்” என்று அவமரியாதை செய்வாரோடு என் நெஞ்சம் உறவாட விழைவதை என்னவென்று சொல்வேன். பேராசை என்றுதான் சொல்ல வேண்டும்.
அன்பினில் கட்டுண்டால் நம்மை மதிக்காதவர் பின்னும் செல்லச் செய்யும். காண்க 10/03/2022. மீள்பார்வைக்காக:
செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன் றன்று. - 1255; - நிறையழிதல்
ஊடலே ஊசலாட்டம்தான். இங்கும் அங்கும் ஆடிக் கொண்டே இருக்கும். ஆனால், அஃது, அன்பென்னும் மையப் புள்ளியைக் (Pivot) கொண்டுதான் ஆடிக் கொண்டிருக்கும்.
இவ்வாறு புலவி என்னும் அதிகாரத்தை நிறைவு செய்கிறார். அடுத்து புலவி நுணுக்கத்தைச் சொல்லப் போகிறார்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments