04/10/2022 (582)
‘மடலூர்தல்’ அல்லது ‘மடலேறுதல்’ என்பது ஒருவரை ஒருவர் விரும்பியபின் அவளின் வீட்டார் அதற்கு இணங்காமல் இருக்கும் போது வேறு வழியின்றி செய்யும் செயல்.
மடலேறுதல் என்பது பனை ஓலையால் செய்யப்பட்ட பொய் குதிரையில் தன்னை அலங்கோலப் படுத்திக் கொண்டு அந்தப் பெண்ணின் படத்தை வைத்துக் கொண்டு ஊர் முழுக்க சுற்றி வருவது. அவனின் உறுதியைப் பார்த்து ஊர் பெரியவர்கள் பெண் வீட்டாரிடம் பேசி திருமணம் செய்து வைப்பர்.
மடலேறுதலைப் பாடும் இலக்கியங்கள் மடல் இலக்கியங்கள் எனப்படுகின்றது. ஆண் மகன்கள் தான் இவ்வாறு மடல் ஏறுவார்கள். இம் முறைமையை மாற்றி பக்திபாவத்தில் இறைவனை நாயகனாக நிணைந்து பெண்களும் மடல் ஏறிவிடுவார்கள் என்ற வகையில் திருமங்கைஆழ்வார் அவர்கள் பெரிய திருமடல், சிறிய திருமடல் என்ற இலக்கியங்களைப் படைத்துள்ளார்கள்.
நா ’ரா’ யணனை விரும்புவதால் ‘ரகரத்தை’ எதுகையாக ஒவ்வொரு அடியிலும் அமைத்துள்ளார்கள்.
எதுகை என்பது இரண்டாவது எழுத்துகள் ஒத்துவருவது.
“…சீரானை செங்கண் நெடியானை தேன் துழாய்த் தாரானை தாமரை போல் கண்ணானை எண்ணரும் சீர்ப் பேராயிரமும் பிதற்றி பெரும் தெருவே ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான் வாரார் பூம் பெண்ணை மடல்- …” சிறிய திருமடல்; திருமங்கை ஆழ்வார்
எப்படித்தான் இந்த தமிழ் அந்த அருளாளர்களுக்கெல்லாம் வந்ததோ? என்று வியப்பாகவே இருக்கிறது.
இது நிற்க. குறளுக்கு வருவோம்.
இந்த உடம்பும் உயிரும் எப்போதும் விரும்புவது மகிழ்ச்சியைத்தான். அதே சமயம் நாணத்தை விட்டு எள்ளி நகையாடும் செயல்களையும் செய்யாது.. ஆனால், அவளை அடையவேண்டும் என்ற நிலையில் தன் உடல், உயிர் பற்றியெல்லாம் கவலைப் பட நேரமில்லை. வெட்கத்தைவிட்டு மடல் ஏற வேண்டியதுதான் என்கிறான் அவன்.
“நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும்
நாணினை நீக்கி நிறுத்து.” --- குறள் 1132; அதிகாரம் – நாணுத் துறவு உரைத்தல்
நாணினை நீக்கி நிறுத்து = வெட்கத்தை விட்டு விடு;
நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும் = நோகாத இந்த உடம்பும் உயிரும் இப்போது மடல் ஏறப் போகின்றது.
நன்றி. மீண்டும் சந்திப்போம்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments