03/04/2024 (1124)
அன்பிற்கினியவர்களுக்கு:
உடல் உறுப்புகள் தம் கட்டுப்பாட்டில் இல்லாத பொழுது, மனத்தோடு பேசுதல் தொடங்கும். எனவே, உறுப்பு நலன் அழிதல் அதிகாரத்தைத் தொடர்ந்து நெஞ்சொடு கிளத்தல்.
எவ்வம் என்றால் துன்பம், தனிமை, தீரா நோய், வெறுப்பு, குற்றம் என்றெல்லாம் பொருள்படும்.
எவ்வம் என்ற சொல்லைத் துன்பம் என்ற பொருளில் குறள் 223 இல் பயன்படுத்தியிருந்தார். காண்க 02/07/2021. மீள்பார்வைக்காக:
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள. - 223; - ஈதல்
காமத்துப் பாலில் எவ்வ நோய் என்றால் தனிமையால் ஏற்படும் வாட்டம். இந்த அதிகாரத்தின் முதல் பாடலைப் பார்ப்போம்.
நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கு மருந்து. – 1241; - நெஞ்சொடு கிளத்தல்
நெஞ்சே, எவ்வநோய் தீர்க்கும் மருந்து ஒன்று எனைத்து ஒன்றும் = நெஞ்சே, எனக்கு ஏற்பட்டுள்ள இந்தத் தனிமை நோய் தீர மருந்து ஒன்றினை, அஃது எப்படிப்பட்ட மருந்தாக இருந்தாலும் பரவாயில்லை;
நினைத்துச் சொல்லாயோ = சிந்தித்துச் சொல்லாயோ?
நெஞ்சே, எனக்கு ஏற்பட்டுள்ள இந்தத் தனிமை நோய் தீர மருந்து ஒன்றினை, அஃது எப்படிப்பட்ட மருந்தாக இருந்தாலும் பரவாயில்லை, சிந்தித்துச் சொல்லாயோ? என்னால் சிந்திக்கவும் முடியவில்லை!
இந்தப் பாடல் அவள் சொல்வது போல இருந்தாலும், இருவருக்குமே பொருந்தும். என்ன மாறுதல் என்றால், திருமணம் முடிக்கும் முன் அவனுக்கும், மணம் முடித்தபின் அவளுக்கும் வரலாம்!
திருக்குறளில், அடுத்து வரும் பாடல், மிகக் குறைந்த எழுத்துகளால் ஆன பாடலாக இருக்கலாம். இந்தப் பாடலில் 22 எழுத்துகளை மட்டுமே பயன்படுத்தியுள்ளார்.
காத லவரில ராகநீ நோவது
பேதைமை வாழியென் னெஞ்சு. – 1242; - நெஞ்சோடு கிளத்தல்
அவர் காதல் இலர் ஆக = நெஞ்சே, அவர் நம்மிடம் காதல் கொண்டவராக இல்லை என்பதனை அவர் இவ்வளவு நாள் நம்மை பிரிந்து இருப்பதிலிருந்து உனக்குத் தெரியவில்லையா?; நீ நோவது பேதைமை = அவர் எப்பொழுது வருவார் என்று எக்காலமும் எதிர்பார்த்து உன்னை நீயே வருத்திக் கொள்வது பேதைமையைத் தவிர வேறில்லை; வாழி என் நெஞ்சு = நீ மிகவும் நல்லவளாக இருக்கிறாய்! வாழிய என் நெஞ்சே!
நெஞ்சே, அவர் நம்மிடம் காதல் கொண்டவராக இல்லை என்பதனை அவர் இவ்வளவு நாள் நம்மை பிரிந்து இருப்பதிலிருந்து உனக்குத் தெரியவில்லையா? அவர் எப்பொழுது வருவார் என்று எக்காலமும் எதிர்பார்த்து உன்னை நீயே வருத்திக் கொள்வது பேதைமையைத் தவிர வேறில்லை. நீ மிகவும் நல்லவளாக இருக்கிறாய்! வாழிய என் நெஞ்சே!
வாழி என்று வருத்தத்துடன் கலந்த கிண்டலாகச் சொல்வது போல அமைந்துள்ளது இந்தப் பாடல்.
22 எழுத்துகளுக்கு, நாம் இப்படி விரிக்க வேண்டியதாக உள்ளது!
புலவர் நன்னன்: அவர் காதல் இல்லாதவராக இருக்கும்போது நீ அவர் வரவை எதிர்பார்த்து ஏங்குவது பேதைமையே யன்றிப் பிறிதேதுமில்லை.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.
Comments