20/10/2022 (596)
சிறு தீயிற்கு காற்று பகை; பெருந்தீயிற்கு அதுவே துணை.
எங்கள் காதல் பெருந்தீயாக பற்றி எறிகிறது. இந்தக் காதல் தீயை ஊராரின் ஏளனப் பேச்சுகள் எனும் காற்று மேலும் பெரிதாக்குமே தவிர இதை அணைத்துவிட முடியாது.
பெருந்தீயை நெய் ஊற்றி அணைக்கவா முடியும்? அதுபோல்தான், இந்த கவ்வையால், அதாவது ஏளனப் பேச்சுகளால், எங்களை பிரித்துவிட முடியும் என நினைப்பது.
“நுதுப்பேம்” என்றால் “அணைப்போம்” என்று பொருளாம். நுது என்றால் தணிப்பது, அடக்குவது.
“நெய்யால் எரி நுதுப்பேம் என்றற்றால் கௌவையால்
காமம் நுதுப்பேம் எனல்.” --- குறள் 1148; அதிகாரம் – அலர் அறிவுறுத்தல்
கௌவையால் காமம் நுதுப்பேம் எனல் = ஏளனப்பேச்சுகளால் எங்கள் காதலைத் தகர்ப்போம் என்பது; என்றற்றால் = என்று+அற்று+ஆல் =எப்படி இருக்கிறது என்றால்; நெய்யால் எரி நுதுப்பேம் = பற்றி எரிகின்ற பெருந்தீயை நெய் ஊற்றி அணைத்துவிடுவோம் என்பதைப் போல இருக்கிறது.
ஏளனப்பேச்சுகளால் எங்கள் காதலைத் தகர்ப்போம் என்பது எப்படி இருக்கிறது என்றால் பற்றி எரிகின்ற பெருந்தீயை நெய் ஊற்றி அணைத்துவிடுவோம் என்பதைப் போல இருக்கிறது.
இதுவரை அலரை, கவ்வையை பரப்பும் ஊராரை வாழ்த்திய நெஞ்சங்கள் சற்று கலங்கியிருப்பதை இந்தக் குறள் காட்டுகிறது.
என்னடா, எங்களின் காதல் செய்தி இவ்வளவு பரவியும் உடையவர்களுக்கு உரைக்கவில்லையே என்ற ஒரு தடுமாற்றம். தன்னைத்தானே உறுதி படுத்திக்கொள்ள இந்தக் குறள்.
அவளிடம் அவன் பிரிந்து செல்லும்போது கூறியது அவளுக்கு நினைவுக்கு வருகிறது.
அவன்: இப்போது நான் உன்னைவிட்டு பிரிந்து செல்கிறேன். உன்னை முறைப்படி இருவீட்டாரும் மகிழும்விதமாக மணமுடிப்பேன். இந்த ஊர் நான் ஓடிவிட்டேன் என்றுகூட பேசும். மேலும், பலவற்றையும் பேசும். அது ஒரு வகையில் நமக்கு உதவும். கவலையை விடு. அதற்கெல்லாம் கூச்சப்படாதே.
அவள்: பிறகு …
அவன்: பிறகென்ன பிறகு? எள்ளி நகையாடுபவர்களே தங்கள் செயல்களை எண்ணி நாணுவார்கள்.
“அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை.” --- குறள் 1149; அதிகாரம் – அலர் அறிவுறுத்தல்
ஒல்வதோ? = தகுமோ?; அலர் நாண ஒல்வதோ? = ஏளனப்பேச்சுகளுக்கு கூனிக்குறுகுவது தகுமோ?
அஞ்சலோம்பு = அஞ்சு+அல்+ஓம்பு = அஞ்சாதிரு;
நீத்தக் கடை = என்னை விட்டு பிரிந்து சென்ற போது(அவர் சொன்னது); கடை பலர் நாண அஞ்சலோம்பு என்றார் = இறுதியில் புரளி பேசும் அனைவரும் வெட்கித் தலைகுனிவதற்கு ஏதுவாக நீ அஞ்சாதிரு என்றார். (ஆகையினால், எனக்கு கூச்சமும் இல்லை, அச்சமில்லை).
என்னை விட்டு பிரிந்து சென்ற போது, அவர் சொன்னது என்னவென்றால், “ஏளனப்பேச்சுகளுக்கு கூனிக்குறுகுவது தகுமோ? இறுதியில் புரளி பேசும் அனைவரும் வெட்கித் தலைகுனிவதற்கு ஏதுவாக நீ அஞ்சாதிரு” என்றார். ஆகையினால், எனக்கு கூச்சமும் இல்லை, அச்சமில்லை.
பழங்காலத்தில் ‘அல்’, ‘இல்’ என்பது எதிர்மறை இடை நிலைகளாக பயன்படுத்தப்பட்டன. உதாரணம்: செய்யற்க = செய்+அல்+க; உண்ணற்க = உண்+அல்+க
இந்தக் குறளுக்கு பல அறிஞர் பெருமக்கள் பல் வேறுவிதங்களில் பொருள் கண்டிருக்கிறார்கள்.
“அஞ்ச வேண்டா என்று அன்று உறுதி கூறியவர், இன்று பலரும் நாணும்படியாக நம்மை விட்டுப் பிரிந்தால் அதனால் அலருக்கு நாணியிருக்க முடியுமோ.” —மூதறிஞர் மு. வரதராசனார்.
“அலர் பேசிய பலரும் வெட்கப்படும்படி இன்று அவர் என்னை விட்டுப் போகும்போது, பயப்படாதே, உன்னைப் பிரியேன் என்று சொல்லிவிட்டார். இனிப் பலரும் பேசும் பேச்சுக்கு நான் வெட்கப்படலாமா? --- பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள்.
நன்றி. மீண்டும் சந்திப்போம்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comentarios