24/01/2024 (1054)
அன்பிற்கினியவர்களுக்கு:
வீற்றிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்கஎல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்எல்லாம் சிவமயமே யாம்… பட்டிணத்தார் சுவாமிகள்
இந்த உலகின் பண்பு என்ன தெரியுமா? என்று ஒரு கேள்வியைக் கேட்கிறார் நம் பேராசான்.
நேற்று இருந்தாள் இன்று வெந்து நீறானாள் என்கிறார் பட்டிணத்தார். எல்லாம் துறந்த சுவாமிகளுக்கும் அன்னையின் மேல் அளப்பறிய பற்று. இந்தப் பற்றினை யாராலும் துறக்க இயலாது.
ஆயிரம் மனத்தாங்கல் அவளுடன் இருந்திருக்கலாம். ஆனால், அவளின் மனத்தின் ஆழத்தில் அன்பின் ஊற்று என்றுமே இருக்கும். இல்லாதபோது வரும் அவளின் நினைவு, இருந்தபோது அவ்வளவாகத் தோன்றுவதில்லை.
நேற்று இருந்தவள் இன்றில்லை என்பதுதான் இந்த உலகின் பண்பு என்கிறார் நம் பேராசான். ஆகையினால், மானுடரே, நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை செய் என்றார் குறள் 336 இல்.
மூச்சு அடங்கும் முன் நல்வினை செய் என்றால், ஏதோ, நம் மூச்சு அடங்கும் முன் என்று மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடாது. நம் பிரியமானவர்களின் காலம் முடிவதற்கு முன்னும் அவர்களுக்குத் தேவையான நல்வினைகளைச் செய்ய வேண்டும் என்றும் பொருள்படும். நல்வினைகள் உடனுக்குடனே செய்தல் வேண்டும். சுபச்செயல் சீக்கிரம் என்கிறார்கள்.
நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்து இவ் உலகு. – 336; - நிலையாமை
நெருநல் = நேற்று; பெருமை = பண்பு; நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை = நேற்று இருந்தவன் இன்று இல்லை; என்னும் பெருமை உடைத்து இவ் உலகு = என்னும் பண்பினைக் கொண்டது இந்த உலகு.
நேற்று இருந்தவன் இன்று இல்லை என்னும் பண்பினைக் கொண்டது இந்த உலகு.
கடுகியே செல்லும் காலத்தில் கடமையைச் செய். காலம் தாழ்த்தாதே. “உடனுக்குடன்” என்பதுதான் நம் பேராசான் வலியுறுத்துவது.
இன்று கிடைப்பதைக் கொண்டு என்ன செய்யமுடியுமோ அதனை இன்றே செய். நாளை வரும். வானத்தை வில்லாய் வளைப்பேன் என்ற எண்ணத்தை விடு.
… எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்
இது தான் பாதை இது தான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறி வரும்
பயணம் முடிந்து விடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால்
மயக்கம் தெளிந்து விடும்…
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதும் இல்லை
நடந்ததையே நினைத்து இருந்தால் அமைதி என்றும் இல்லை …
- கவியரசு கண்ணதாசன், நெஞ்சில் ஓர் ஆலயம், 1962
இந்தப் பாடலில், ஆயிரம் வாசல் இதயம், அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம் என்று எழுதியிருப்பார் கவிஞர்.
கவிஞர் சொன்னதோ ஆயிரம் எண்ணங்கள். நம் பேராசான் ஆயிரம் எல்லாம் ரொம்ப சின்ன எண்ணிக்கை என்கிறார். கோடி எண்ணங்கள் என்றுகூட சொல்ல முடியாது. அதற்கு மேலும், மேலும் என்கிறார்.
காலத்தைக் கருத்தில் கொண்டு, நிகழ் காலத்தில் ஒரு போதும் வாழ்வது அறியாமல், பல கோடி எண்ணங்களில் ஆழ்ந்திருப்பர். விழித்துக்கொள் இதுதான் நம் பேராசானின் கட்டளை.
ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப
கோடியு மல்ல பல. – 337; - நிலையாமை
ஒரு பொழுதும் வாழ்வது அறியார் = நிகழ் காலத்தில் ஒரு போதும் வாழ்வது அறியார்; கருதுப கோடியும் அல்ல பல = ஆனால், காற்றினில் எண்ணும் எண்ணங்களோ கோடிக்கும் மேல்.
நிகழ் காலத்தில் ஒரு போதும் வாழ்வது அறியார். ஆனால், காற்றினில் எண்ணும் எண்ணங்களோ கோடிக்கும் மேல்.
கற்பனை உலகில் இருந்து நிகழ் உலகிற்கு வாருங்கள். செய்ய வேண்டியதைச் செய்யுங்கள் என்கிறார்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
コメント