08/05/2022 (436)
நேற்று பார்த்தக் குறளில் உள்ள ‘நிழல்நீரும்’ என்பதற்கு நிழலும், நீரும் என்று பிரித்து, நிழலில் உள்ளவர்களுக்கு நீர் அதிகமானால் இன்னாது என்று சிந்தித்தோம்.
அதை, வேற மாதிரியாக பொருள் எடுக்கக்கூடாதா? என்ற கேள்வி உங்கள் மனதில் எழுந்திருக்கலாம். அப்படித்தான் அறிஞர் பெருமக்கள் பல வகையிலே பொருள் சொல்லியிருக்கிறார்கள்.
சிலர், நிழலும், நீரும் என்று பிரித்து இரண்டுமே இனிமையானதாக இருந்தாலும் தீமையானதாக மாறலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
சிலர், ‘நிழலில் உள்ள நீர்’ என்று எடுத்து, சூரியனே படாமல் நிழலிலே நீர் இருந்தால் அது தீமையாக மாறலாம் என்று பொருள் சொல்லியிருக்கிறார்கள்.
உங்களுக்கு எது சரியென்று படுகிறதோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்.
“நிழல்நீரும் இன்னாத” என்கிற சொற்களை மாற்றி “நீரும் நிழலது இனிதே” என்று ஒரு குறளை நம் பேராசான் சொல்லியிருக்கிறார். அதையும் பார்ப்போம்.
என்ன சொல்கிறார் என்றால், நீரானது நிழலிலே குளிர்ந்து இருந்தால் பருகுவதற்கு இனிதாக இருக்கும் என்கிறார். எதற்காகச் சொல்கிறார் என்றால் ஊடலும் அன்புடையவர்களிடத்தில் கொண்டால் அதுவும் மிக இனிதாக இருக்கும், மாறாக அன்பில்லாதவர்களிடம் கொள்ளும் ஊடல் இனிதாகாது என்கிறார். இது, இன்பத்துப் பாலில், புலவி எனும் (131 ஆவது) அதிகாரத்தில் ஒன்பதாவது குறள்.
“நீரும்நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.” --- குறள் 1309; அதிகாரம் – புலவி
வீழுநர் = காதலில் விழுந்தவர்கள்; நீரும்நிழலது இனிதே = நீரானது நிழலின் கண்ணே இனிது, வெயிலின் கண் இனிதாகாது; புலவியும் வீழுநர் கண்ணே இனிது = (அது போல,) அன்புடையோர் பின் கூடுதலுக்கு, ஊடலும் இனிதே என்று கொள்ள வேண்டும். அன்பில்லாதவர்களிடம் ஊடல் இனிமையாகாது.
வெயிலில் கொதிக்கிற நீரைக் குடிச்சுப் பார்த்தால் இந்தக் குறளைப் புரிந்து கொள்ளலாம்! என்றார் நம்மாளு.
நீங்க என்ன சொல்றீங்க? கருத்துகளைப் பகிருங்கள்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com )
Comentarios