06/10/2021 (225)
அறிஞர்கள் எழுதிய நூல்களின் முக்கியத்துவத்தை நேற்று பார்த்தோம். அவர் அவர் துறைகளில் உள்ள தலைசிறந்த பெரியவர்களின் நூலைக் கற்றல் மிகவும் அவசியம். இது நிற்க.
நாம குறளுக்கு வருவோம். தூது என்ற அதிகாரத்தில் மூன்றாவது குறள்.
“நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு.” --- குறள் – 683; அதிகாரம் – தூது
நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் = நூல்களைக் கற்று அறிந்தவர்களிடையே தான் கற்ற திறத்தை எடுத்து உரைக்க வல்லவன் ஆகுதல்; வேலாருள் = ஆயுதத்தைக் கொண்டு கொல்வதையே வேலையாக கொண்டிருப்பவர்களிடம்; வென்றி வினையுரைப்பான்= (அவர்களிடமும்) வெற்றி பெரும் வகையிலே உரைத்தல், பேசுதல்; பண்பு = (இவ்விரண்டும்) தூதுவனுக்கு பண்புகள்.
அஃதாவது, தூதுவனுக்கு இரண்டும் வேண்டும்.
எந்த இரண்டு?
நன்றாக நூல்களைக் கற்றல் மற்றும் அதைப் பயன் படுத்தி எடுத்து உரைத்து பகைவரையும் வெற்றி காணல்.
படிச்சா மட்டும் போதாது. அதை எடுத்தும் சொல்லனும்.
யாரிடம்?
நம்மிடம் மாறுபடுபவர்களிடம்.
எவ்வாறு சொல்லனும்?
அவர்கள் வாளால் பேசுபவர்களா இருந்தாலும், அவர்களும் ஏற்றுக் கொள்ளும்படி சொல்லனும்.
சொன்ன வகையிலேயே, அவர்கள் எது நல்லது என்று தெரிந்து கொள்ளும் வகையிலே சொல்லனும்.
அவர்களையும் வெற்றி காண்பது தூதுவனுக்கு பண்புகள்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comentarios