09/01/2023 (676)
“பார்க்காத பயிரும், கேட்காத கடனும் பாழ்” என்ற பழமொழி நமக்குத் தெரியும். அதாவது, எப்போதும் கவனம் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் பழமொழி. இது நிற்க.
நாள் தோறும், தலைமை செய்ய வேண்டியது எது என்ற கேள்விக்கு, நம் பேராசான் இரு குறள்களில் தன் குறிப்பைக் காட்டுகிறார். நாள் தோறும் செய்யவேண்டியதை “நித்தியக் கடமை” என்பர். அதாவது, இதன் பொருள் எப்போதும் செய்ய வேண்டியது! ஒரு நாளைக்கு ஒரு முறை என்று பொருளல்ல!
நம் பேராசான் சொன்ன இரு குறள்களில், முதல் குறளை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். காண்க 16/12/2022 (652), மீள்பார்வைக்காக:
“நாள்தோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடாது உலகு.” --- குறள் 520; அதிகாரம் – தெரிந்து வினையாடல்
வினைசெய்வான் கோடாமை = பணியாற்றுபவர்களின் உறுதி, விட்டுக் கொடுக்காத தன்மை; மன்னன் நாள் தோறும் நாடுக = தலைவன் நாள் தோறும் நாட வேண்டும்; கோடாது உலகு = (அப்போது), இந்த உலகமும் நேர் வழியில் செல்லும்.
பணியாற்றுபவர்களின் உறுதி, விட்டுக் கொடுக்காத தன்மையை, தலைமை நாள் தோறும் நாட வேண்டும்; அப்படிச்செய்தால், இந்த உலகமும் நேர் வழியில் செல்லும்
அதாவது, தன்னுடன் நன்றாக பணி புரிபவர்களை, நாள்தோறும் ஊக்கப்படுத்தி தன்னுடனே இருத்திக் கொண்டால் உலகு செழிக்கும் என்றார்.
அப்படிச் செய்யாவிடில் என்ன ஆகும்?
நம்மாளு: நாடு கெடும்!
ஆசிரியர்: மிகச் சரி. நாள் தோறும் நாடி ஒழுங்கு செய்யாவிட்டால் நாள் தோறும் நாடு கெடுமாம். அது என்ன நாள் தோறும் நாடு கெடும்? நாடு கெடும் என்றால் போதாதா?
நம்: ங்கே...
ஆசிரியர்: நாள் தோறும் கெடும் என்பது ‘irreversible damage’ என்பதைக் குறிக்கிறது. அதாவது, ‘மாற்ற இயலா கேடு’களாக உருவெடுக்கும். நாளைக்கு பார்க்கலாம் என்று ஒரு தலைமை இருக்க முடியாது. அவ்வாறு இருந்தால் அதுவும் கொடுங்கோன்மை என்கிறார்.
“நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்தொறும் நாடு கெடும்.” --- குறள் 553; அதிகாரம் – கொடுங்கோன்மை
நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன் = தன்னுடன் இருப்பவர்கள் செய்யும் செயல்களை, அதிலும் குறிப்பாகத் தீமைகளை, ஒரு தலைமை, நாள் தோறும் கண்காணித்து ஒழுங்கு செய்ய வேண்டும்; நாள் தொறும் நாடு கெடும் = (அவ்வாறு செய்யாவிட்டால் தன் நாடு ஒவ்வொரு கணமும் அழிந்து கொண்டிருக்கும்.
தன்னுடன் இருப்பவர்கள் செய்யும் செயல்களை, அதிலும் குறிப்பாகத் தீமைகளை, ஒரு தலைமை, நாள் தோறும் கண்காணித்து ஒழுங்கு செய்ய வேண்டும்; அவ்வாறு செய்யாவிட்டால் தன் நாடு ஒவ்வொரு கணமும் அழிந்து கொண்டிருக்கும்.
மீண்டும் சந்திப்போம்.
நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments