top of page
Search

நாளென ஒன்றுபோற் காட்டி ... 334

22/01/2024 (1052)

அன்பிற்கினியவர்களுக்கு:

நிலையாமையைத் தொடர்வோம். முதல் குறளில் ஆக்கிய பொருள்களுக்கு அழிவு உண்டு. இதனை மறந்து அப் பொருள்களின் மேல் பற்று கொள்வது இழிவு என்றார் குறள் 331 இல். காண்க 20/01/2024.

 

குறள் 332 இல், செல்வமானது கொஞ்சம் கொஞ்சமாகச் சேரும். போகும் போது ஒரேயடியாகப் போகும் பண்பு கொண்டது என்பதைக் கூத்தாட்டு அவையை (திரையரங்கு) எடுத்துக்காட்டாக்கி விளக்கினார். காண்க 19/01/2021.

 

நல்ல படத்தைத் தொடர்ந்து ஓட்டினால் கூட்டம் வந்து கொண்டேயிருக்கும். செல்வம் இருக்கும்போதே, நல்ல செயல்களைச் செய்தால் நம் வாழ்நாள் மறக்கப்படாமல் இருக்கும் என்றார் குறள் 333இல். நிலையாமையில் விரும்ப வேண்டிய நிலைத்த பண்பை குறிக்கிறார். காண்க 20/01/2021.


இரவும், பகலும் சேர்ந்தால் ஒரு நாள் என்கிறோம். ஏழு நாள் ஒரு வாரம். இப்படிக் காலத்தின் அளவை பல் வேறு அளவைகளால் பகுத்து வைத்து இருக்கிறோம்.


ஆனால், காலம் என்பது ஒரு கருத்தியலே (concept). அஃது, ஓர் அருவப் பொருள் (intangible). அதில் ஏதும் பகுப்புகள் இல்லை. அது நகர்ந்து கொண்டேயிருக்கும்.

நேற்றும் இரவு இருந்திருக்கும்; பகலும் இருந்திருக்கும். இன்றும், நாளையும் அவ்வாறே. ஆனால் அவை ஒன்றா என்றால் இல்லை. காலம் கடந்து கொண்டேயிருக்கும்.


… பிறக்கின்ற போதே இறக்கின்ற தேதி

இருக்கின்ற தென்பது மெய்தானே …

… காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்

வாலிபம் என்பது பொய் வேஷம் …

… தூக்கத்தில் பாதி… ஏக்கத்தில் பாதி

போனது போக எது மீதம்

… பேதை மனிதனே… கடமையை

இன்றே செய்வதில் தானே ஆனந்தம் …

கனவு காணும் வாழ்க்கை யாவும்

கலைந்து போகும் கோலங்கள் … கவிப்பேரரசு வைரமுத்து; நீங்கள் கேட்டவை, 1984


திடீரென்று ஒரு நண்பர் அழைத்து, “நாளைக்குக் காலை மூன்று மணிக்கு நம் விமானப் பயணம் தாய்லாந்திற்கு (Thailand); கிளம்பித் தாயாராயிரு.” என்றால், நாம் உடனே பரபரப்பாகித் தேவையானவற்றைச் செய்ய ஆரம்பித்துவிடுவோம். நேரத்தை விணடிக்க மாட்டோம். தவறாமல் கிளம்பியும் செல்வோம்!


நம் வாழ்வும் அவ்வாறே! என்ன ஒன்று நமக்கு இந்த உலகைவிட்டு பிரியப்போகும் நேரம் தெரியாது. தெரியாது என்பதாலேயே அது இல்லை என்றாகிவிடுமா என்ன? நாம் அதற்குத் தயாராக வேண்டியதும் முக்கியம்தான்!


ஒவ்வொரு நாளும் நம் உடலின் வாழ்நாள் குறைந்து கொண்டிருப்பது என்பது ஓர் உண்மை. இல்லறத்தில் வாழ்ந்து களித்து பின்பு ஓய்வெடுக்கும் பருவத்திலும் அந்த ஞானம் வரவில்லையென்றால்?

திருக்குறளைப் படியுங்கள். நிச்சயம் ஞானம் வரும்.


நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்

வாள துணர்வார்ப் பெறின். – 334; - நிலையாமை

 

நாள் என ஒன்று போல் காட்டி = எல்ல நாள்களும் ஒன்றேபோல் தோற்றமளித்து;

வாள் அது  உணர்வார்ப் பெறின் = காலம் ஆனது ஒரு வாள்போல; உயிர் ஈரும் = உடலில் இருந்து உயிரை அறுத்துக் கொண்டே இருக்கும்.

 

எல்லா நாள்களும் ஒன்றேபோல் தோற்றமளித்துக் “காலம்” ஆனது ஒரு வாள்போல,  உடலில் இருந்து உயிரை அறுத்துக் கொண்டே இருக்கும்.

 

நாளைக்குப் பார்த்துக்கலாம் என்று இருக்க இயலாது! கவனம் தேவை என்கிறார்.

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Comments


Post: Blog2_Post
bottom of page