30/08/2023 (908)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
ஒருவனுக்கு ஏற்பட்டிருக்கும் இன்னல்களை அல்லது சறுக்கல்களை வெளியே காண்பித்தால், தக்கத் தருணத்தை நோக்கி காத்திருக்கும் பகைவர்களுக்கு அவை வாய்ப்பாக அமையும் என்கிறார்.
“நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க
மென்மை பகைவ ரகத்து.” --- குறள் 877; அதிகாரம் – பகைத்திறம் அறிதல்
நொந்தது அறியார்க்கு நோவற்க = தாம் இன்னல்களால் சூழ்ந்து நொந்து கொண்டுள்ளோம் என்பதை அறியாமல் இருக்கும் நண்பர்களுக்கோ அல்லது இரண்டும் இல்லாமல் நடுவு நிலைமையில் இருப்பவர்களுக்கோ தம் நிலையைக் காட்டிக் கொடுக்காதீர்; மென்மை பகைவர் அகத்து மேவற்க = (அது மட்டுமல்ல) மிக மிகச் சிறிதளவில் நலிந்திருந்தால்கூட அந்தச் செய்தியையும் பகைவனுக்குச் சென்று சேராமல் காக்க.
தாம் இன்னல்களால் சூழ்ந்து நொந்து கொண்டுள்ளோம் என்பதை அறியாமல் இருக்கும் நண்பர்களுக்கோ அல்லது இரண்டும் இல்லாமல் நடுவு நிலைமையில் இருப்பவர்களுக்கோ தம் நிலையைக் காட்டிக் கொடுக்காதீர். அது மட்டுமல்ல, மிக மிகச் சிறிதளவில் நலிந்திருந்தால்கூட அந்தச் செய்தியைப் பகைவனுக்குச் சென்று சேராமல் காக்க.
அஃதாவது, நம் பலவீனத்தை (weakness) நாமே வெளிப்படுத்துவது ஆபத்து என்கிறார்.
சரி, அப்போது என்ன செய்ய வேண்டும்? அதற்குதான் அடுத்தக் குறளை அமைத்துள்ளார்.
“வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு.” --- குறள் 878; அதிகாரம் – பகைத்திறம் தெரிதல்
வகையறிந்து = பகைவரை அழிக்கும் வகைகளை ஆராய்ந்து அறிந்து அதற்கான திட்டங்களை வகுத்து; தற் செய்து = அதற்கேற்றார் போல் தம்மை உயர்த்திக் கொண்டும்; தற் காப்ப = வகுத்த அந்தத் திட்டத்தில் தொய்வு வராமலும் அதை விட்டு விலகாமலும் தம்மைக் காத்துக் கொண்டு இருப்பின்; பகைவர்கண் பட்ட செருக்கு மாயும் = பகைவரிடம் உள்ள செருக்கு அழிந்து போகும்.
பகைவரை அழிக்கும் வகைகளை ஆராய்ந்து அறிந்து அதற்கான திட்டங்களை வகுத்து, அதற்கேற்றார் போல் தம்மை உயர்த்திக் கொண்டும், வகுத்த அந்தத் திட்டத்தில் தொய்வு வராமலும் அதை விட்டு விலகாமலும் தம்மைக் காத்துக் கொண்டு இருப்பின் பகைவரிடம் உள்ள செருக்கு அழிந்து போகும்.
அஃதாவது, நமக்கு ஏற்படும் இன்னல்களை வெளி உலகிற்குத் தெரியாமல் வைத்துக் கொண்டு அதனில் இருந்து மீண்டுவருதல் முதல் படி. அடுத்த படி என்னவென்றால், பகைவனின் செருக்கு அழியும் விதத்தில் நம்மை உயர்த்திக் கொள்ள வேண்டும். அந்த நிலைக்குக் கொஞ்சமும் தாழ்வு இல்லாமல் பாதுகாத்துக் கொண்டும் இருக்க வேண்டும் என்று குறள் 877 மற்றும் 878 இல் தெரிவிக்கிறார்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments