05/09/2021 (194)
சும்மா, விளையாட்டுக்கு என்றுகூட ஒருவரை இகழக் கூடாதாம். இகழ்ச்சி என்பது மாறுபாடு கொண்டு மற்றவரை தாழ்த்துவது, அவமதிப்பது.
நல்ல பண்புடையவர்கள், பகை கொண்டவர்களைக்கூட இகழ மாட்டார்களாம். அது மட்டுமல்ல, தன் பண்பு கெடாமல் பகையிடமும் நடந்து கொள்வார்களாம்.
இதை நம் பேராசான் உறுதி படுத்துவதுபோல், நமக்கு எடுத்துச் சொல்கிறார் இவ்வாறு:
“நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.” --- குறள் 995; அதிகாரம் – பண்புடைமை
இகழ்ச்சி நகையுள்ளும் இன்னாது =இகழ்தல் விளையாட்டாக செய்தாலும் தீது; பாடு அறிவார் மாட்டு = உலகியலை நன்கு அறிந்தவர்களிடம்; பகையுள்ளும் = பகையையும் எண்ணிப்பார்க்கும்; பண்பு உள = இனிய பண்பு இருக்கும்
பாடறிவார் = பாடு +அறிவார். பாடு அறிவார் என்றால் உலகவியலையும் உள்ளவியலையும் அறிந்தவர்கள் என பொருள் கொள்ளலாம். சுருக்கமாக சொன்னால் பண்புடையவர்கள் ஆகும்.
பகை உள்ளும் என்றால் பகையை எண்ணுவது என்று ஒரு பொருள் வருகிறது.
பகை உள்ளும் பண்பு உள என்றால் பகையிடமும் நல்ல பண்புகள் இருக்கும் என்ற பொருளும் வருகிறது.
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்றார் பேரறிஞர் அண்ணா. என்னே ஒரு அழகு, என்னே ஒரு ஆழம்.
மேலே கண்ட பகை புறப்பகை, வெளியே இருக்கும் பகை. இதற்கு, பல புறக்காரணங்கள் இருக்கலாம். இதுவும், நமது முக மலர்ச்சியையும், அக மகிழ்ச்சியையும் விலை பேசும்.
ஆனால், எந்தப் பகைக்கும் அடிப்படை நம் அடிமனதில் எழும் ‘சினம்’. நமக்கு உண்மையான பகையே சினம்தான் என்கிறார் நம் வள்ளுவப் பெருந்தகை. அதைவிட ஒரு பெரிய பகைவன் இல்லை என்கிறார்.
“நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.” ---குறள் 304; அதிகாரம் - வெகுளாமை
வெகுளாமை = சினம் கொள்ளாமை; நகையும் = முக மலர்ச்சியும்; உவகையும் = உள மகிழ்ச்சியும்; கொல்லும் = அழிக்கும்; சினத்தின் பிற பகையும் உளவோ = சினத்தைத்தவிர வேற பகை இருக்கா என்ன?
சினத்தைக் கொல்வீர்; சிரிப்பைக் கொள்வீர். சிரிப்பினைத் தொடர்வோம்!
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்… உங்கள் அன்பு மதிவாணன்.
Comments